புறநானூறும் பழந்தமிழர் மானஉணர்வும் - மீள் வாசிப்பு

புறநானூறும் பழந்தமிழர் மானஉணர்வும் - மீள் வாசிப்பு

பேராசிரியர் முனைவர் நா.இளங்கோ,
இணைப் பேராசிரியர்,
பட்ட மேற்படிப்பு மையம்,
புதுச்சேரி - 8.

புறநானூற்றின் சிறப்பியல்புகள்:

சற்றேறக்குறைய ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் வாழ்ந்த புலவர்கள் பலரால் பல காலங்களில் பல சூழ்நிலைகளில் பாடப்பட்ட புறப்பொருள் பற்றிய நானூறு பாடல்களின் தொகுப்பே புறநானூறு என்னும் சங்கத்தமிழ் நூலாகும். இதனைத் தொகுத்தோரும் தொகுப்பித்தோரும் இன்னார் என்று தெரியவில்லை.400 புறநானூற்றுப் பாடல்களில் 138 பாடல்கள் 43 மூவேந்தர்களைப் பற்றியதாகவும் 141 பாடல்கள் 48 குறுநில மன்னர்களைப் பற்றியதாகவும் 121 பாடல்கள் பாடப்பெற்றவர்களின் பெயர் தெரியாதவைகளாகவும் அமைந்துள்ளன. 138 மூவேந்தர் பற்றிய பாடல்களில் 27 பாடல்கள் சேர வேந்தர்களைப் பற்றியும் 37 பாடல்கள் பாண்டிய வேந்தர்களைப் பற்றியும் 74 பாடல்கள் சோழ வேந்தர்களைப் பற்றியும் பாடப்பட்டுள்ளன. 141 குறுநில மன்னர்கள் பற்றிய பாடல்களில் 23 பாடல்கள் அதியமான் நெடுமானஞ்சியைப் பற்றியும் 17 பாடல்கள் வேள் பாரியைப் பற்றியும் 14 பாடல்கள் ஆய் அண்டிரனைப் பற்றியும் பேகன், குமணனைப் பற்றி ஏழு ஏழு பாடல்களும் காரியைப் பற்றி ஆறு பாடல்களும் நாஞ்சில் வள்ளுவன் பிட்டங்கொற்றன் ஆகியோரைப் பற்றி ஐந்தைந்து பாடல்களும் எழினியைப் பற்றி நான்கு பாடல்களும் இடம்பெற்றுள்ளன. 4 குறுநில மன்னர்கள் மும்மூன்று பாடல்களிலும் 6 குறுநில மன்னர்கள் இரண்டிரண்டு பாடல்களிலும் 29 குறுநில மன்னர்கள் ஒவ்வொரு பாடலிலும் பாடப்பட்டுள்ளனர்.157 புலவர்கள் புறநானூற்றின் 386 பாடல்களைப் பாடியுள்ளனர். இவர்களில் 15 பேர் பெண்பாற் புலவர்கள் 142 பேர் ஆண்பாற் புலவர்கள். 12 பாடல்களைப் பாடியவர்கள் பெயர் தெரியவில்லை.

புறநானூறு காட்டும் சங்கால வாழ்வியல்:
புறநானூறு பெரிதும் சேர சோழ பாண்டிய மூவேந்தர்களைப் பற்றியும் குறுநில மன்னர்கள் பலரைப் பற்றியும் பேசினாலும் இந்நூல் சங்ககால அரசியல் மற்றும் சமுதாய வரலாற்று நூலாகவே அறிஞர் பெருமக்களால் போற்றப்படுகிறது. ஏனெனில் இந்நூல் வழி சங்ககால மக்களின் வாழ்க்கைமுறை, அவர்தம் வீரச்சிறப்பு, புலமைத்திறம், அரசர்களின் கொடைத்திறம் மானஉணர்வு முதலான அரிய பல செய்திகளை அறிந்துகொள்ள முடிகிறது.புறநானூறு கூறும் பழந்தமிழர் வாழ்வியல் கூறுகள் பலவற்றில் தமிழர்தம் மானஉணர்வு பற்றிய செய்தியே இக்கட்டுரையின் ஆய்வுப் பொருளாகின்றது.

மானம்:

மானம் என்ற சொல் இன்றைய வழக்கில் பேசப்படும் பொருளுக்கும் திருக்குறள் சங்க இலக்கியக் காலங்களில் வழங்கப்பட்ட பொருளுக்கும் வேறுபாடு உண்டு. இன்றைக்கு மானம் என்பது வெட்கம், நாணம் என்ற பொருளில் வழங்கப்படுகிறது.மானக்குறைவு ஏற்படுவதை அவமானம் என்ற சொல்லாலும் மானஉணர்ச்சி உடையவனை மானஸ்தன், மானி என்றும் குறிப்பிடுகின்றார்கள். ரோஷக்காரன், கோபப்படும் இயல்புடையன் என்ற பொருளிலும் இச்சொல் பயன்படுத்தப் படுகின்றது. மேலும் தன்மானம் என்ற சொல்வழக்கும் மானம் என்ற பொருளில் வழங்கப்படுகிறது.திருவள்ளுவர் மானம் என்ற பண்பை நற்குடிப் பிறப்பின் பண்பாகக் கருதுகின்றார் என்று அதிகார வரிசைமுறையை வைத்துப் பரிமேலழகரும் மணக்குடவரும் குறிப்பிடுகின்றனர். மானம் என்ற பண்பாவது எஞ்ஞான்றும் தம்நிலையில் தாழாமையும் தெய்வத்தால் தாழ்வு வந்துழி உயிர் வாழாமையும் ஆம் என்பது பரிமேலழகர் தரும் விளக்கம்.

அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர் -குறள். 954

என்று குடிமை என்ற அதிகாரத்தில் சொன்ன பண்பின் விரிவாகவே மானம் என்ற அதிகாரத்தைப் படைக்கிறார் திருவள்ளுவர். மானம் அதிகாரத்தில் வரும் 1, 2, 5 ஆம் திருக்குறள்கள் மேலே குறிப்பிட்ட திருக்குறளை(954) ஒத்ததாகவே படைக்கப்பட்டுள்ளன. மானஉணர்ச்சிக்குக் கேடு வருமேயானால் உயிரை விடுவதே மேலானது என்று அதிகாரத்தில் வரும் பிற குறட்பாக்கள் தெரிவிக்கின்றன.

தலையின் இழிந்த மயிர்அனையர் மாந்தர்
நிலையின் இழிந்த கடை -குறள். 964

மருந்தோமற் றூன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடழிய வந்த இடத்து -குறள். 968

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின் -குறள். 969

மேலும் மானம் உடையவர் தம்மை மதியாதார் பின்சென்று வாழ்வதை விட உயிரை விடுவதே மேலானது என்றும் கூறுகின்றார்.

ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று -குறள். 967

மானம் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறும் கருத்துக்களைத் தொகுத்துப் பார்த்தால், மானம் என்பது தமக்குப் பிறர் செய்யும் மானக்கேட்டை எண்ணி அவர்மேல் கோபப்படுவதோ அவரைத் தூற்றுவதோ மானஉணர்ச்சி என்று எங்கும் எப்பொழுதும் குறிப்பிடப் படவில்லை. தன் தவறு பற்றித் தன் நெஞ்சமே வருத்;த அதனால் உண்டாகும் உணர்ச்சியே சிறந்த மானமாகும். மானம் உடையவர் தன்னலம் குறைந்தவராக விளங்க வேண்டுமே அல்லாமல் தன்னலம் கருதிப் பிறர்மேல் சினமும் பகையும் கொள்ளல் கூடாது. ஆதலால் அந்தத் தன்னல உணர்ச்சியை மானம் என்று கூறுவது பொருந்தாது. இன்னும் ஆராய்ந்தால் மானம் என்பது தன்குடி தன்நாடு முதலியவற்றின் பெருமையையும் உலக வாழ்க்கைக்கு அடிப்படையான உயர்ந்த கொள்கைகளின் பெருமையையும் காக்கப் பயன்படுவதே அல்லாமல் தன்னல அடிப்படை கொண்ட தன்பழி, தன்புகழ், தன்ஆக்கம், தன்கேடு என்பனவற்றைப் பொருளாகக் கொள்வது அன்று.மானம் உடையவர்கள் உயிர் வாழ்க்கையின் அடிப்படை கெடுவதாக இருந்தாலும், உயிர் நீங்குவதாக இருந்தாலும், உயர்ந்த நெறியிலிருந்து பிறழ மாட்டார்கள். உயர்ந்த கொள்கைகளை இழக்கும் நிலை வந்தால் அந்தக் கொள்கைகளை வாழவைத்துத் தம் உயிரை விட்டுவிடுவார்கள். இத்தகைய உணர்ச்சிக்கே மானம் என்பது பெயர்.

புறநானூற்றுப் புலவர்களும் மான உணர்வும்:

சங்ககால மன்னர்களும் மக்களும் தம்வாழ்வு உயிர் இரண்டைக் காட்டிலும் மானமே பெரிதெனப் போற்றி வாழ்ந்தார்கள் என்பதைப் புறநானூற்றுப் பாடல்களின் வழி அறிய முடிகின்றது.புறநானூற்றுக் கட்டுரையாளர்களும் திறனாய்வாளர்களும் பழந்தமிழர் வாழ்வைப் பற்றிக் குறிப்பிடும் போதெல்லாம், சங்ககாலப் புலவர்கள் பலர் தம்பாடல்களில் அவர்களது மானஉணர்வை வெளிப்படுத்தியுள்ளதாகவும் மானஉணர்வுக்கு மன்னர்களால் இழுக்கு நேர்ந்தபோது அவர்களைத் துச்சமாக எண்ணிச் சாடியுள்ளனர் என்றும் பல சான்றுகளைக் காட்டி எழுதி வருகின்றார்கள். இப்படி அவர்கள் காட்டும் சான்றுகளை மறுபரிசீலனைச் செய்து புலவர்கள் வெளிப்படுத்தியது மானஉணர்வு என்பது பொருத்தமானதுதானா? என்பதை முதலில் ஆய்வோம்.

1. பெருந்தலைச் சாத்தனார் என்ற புலவர் கடியநெடுவேட்டுவனிடம் பரிசில் பெறுவதற்காகச் சென்றபொழுது அவன் பரிசில்தரக் காலம் நீட்டித்ததைப் பொறுக்காமல் பாடிய பாடல் வரிகள் அவரின் மானஉணர்ச்சியை வெளிப்படுத்தியதாகக் குறிப்பிடுவார்கள். பெருந்தலைச் சாத்தனாரின் பாடல் வரிகள்,
முற்றிய திருவின் மூவர் ஆயினும்
பெட்பின்றி ஈதல் யாம் வேண்டலமே.
... .... .... .... .... ........ .... .... .... தேரொடு
ஒளிறு மருப்பு ஏந்திய செம்மல்களிறு
இன்று பெயரல பரிசிலர் கடும்பே. -புறம். 205.

இப்பாடலில் வரும் மூவேந்தராயினும் பேணாது, மதியாது தரும் பொருள் எமக்குத் தேவையில்லை என்று கூறும் புலவர் பாடலின் நிறைவுப் பகுதியில் தேர், யானைகளைப் பரிசிலாகப் பெறாமல் நாங்கள் பெயரமாட்டோம் என்கிறார். இது மானஉணர்வின் வெளிப்பாடா? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
2. ஒளவையார், அதியமான் நெடுமானஞ்சி தமக்குப் பரிசில் தர ஒருசமயம் காலம் தாழ்த்தியபோது அவர் கூறிய சொற்கள் மிகச்சிறந்த மானஉணர்வின் வெளிப்பாடு என்று குறிப்பிடுவார்கள்.ஒளவையாரின் பாடல் வரிகளைக் காண்போம்,

கடுமான் தோன்றல் நெடுமான் அஞ்சி
தன்அறி யலன்கொல் என்அறி யலன்கொல்
.... .... .... .... .... .... ....
எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே! -புறம். 206.

இப்பாடலில் அதியமான் என்தகுதியை அறியவில்லையா? அல்லது அவன் தகுதியை அறியவில்லையா? என்று கோபப்படும் ஒளவையார், இதோ உடனே புறப்படுகின்றேன் எங்கே சென்றாலும் எனக்குச் சோறு கிடைக்கும் என்கிறார். மேற்கூறிய ஒளவையின் சொற்களை திருவள்ளுவரின் மானம் பற்றிய இலக்கணங்களோடு பொருத்திப் பாருங்கள். அதுமட்டுமல்ல காலம் நீட்டித்ததற்காகக் கோபப்படும் இதே ஒளவையார் அதியமானைப் புகழ்ந்து பாடும் மற்றொரு பாடலில்,அதியமான், பரிசில் பெறூஉம் காலம்நீட்டினும் நீட்டாது ஆயினும், களிறுதன்கோட்டிடை வைத்த கவளம் போலக்கையகத்தது அது பொய்யா காதே! -புறம். 101. என்று பாடுகிறார். இப்பாடலில் அதியமான் பரிசில் தர எவ்வளவு காலம் நீட்டித்தாலும் யானைக் கொம்பிடையே வைத்த கவளம் போல உறுதியாகக் கிடைக்கும் என்கிறார். கோபப்பட்டதை மானஉணர்ச்சி என்றால், இதை என்னவென்று சொல்வது.
3. பெருஞ்சித்திரனார் என்ற புலவர் அதியமான் நெடுமானஞ்சி தம்மைக் காணாமலே தமக்குப் பரிசில் கொடுத்தனுப்பியபோது அவர் பாடிய பாடல் மிகச்சிறந்த மானஉணர்வின் வெளிப்பாடு என்று குறிப்பிடுவார்கள்.பெருஞ்சித்திரனாரின் பாடல் வரிகளைக் காண்போம்,

.... .... .... .... .... என்னையாங்கு அறிந்தனனோ
தாங்கரும் காவலன்காணாது ஈத்த இப்பொருட்கு
யான்ஓர்வாணிகப் பரிசிலன் அல்லேன்,
பேணித்திணை அனைத்து ஆயினும் இனிது
அவர்துணை அளவு அறிந்து நல்கினர் விடினே! -புறம். 208.

இப்பாடலில் என்னைப் பார்க்காமலே மன்னன் எப்படி என்தகுதியை அறிந்தான்? எப்படி என்னைப் பார்க்காமலே பரிசு கொடுத்தனுப்பலாம்? தினையளவு கொடுத்தாலும் என்னைப் பேணித் தருவதே சரி என்றெல்லாம் கோபப்படுகின்றார் பெருஞ்சித்திரனார்.இதே புலவர் குமணனைப் புகழ்ந்து பாடும் போதும் மகிழ்ச்சியோடு நீ குன்றிமணியளவு கொடுத்தாலும் போதும் என்று கூறிவிட்டு, வேறொரு பாடலில் (புறம். 161.) நான் யானைமேல் ஏறிச் செம்மாந்து செல்ல விரும்புகிறேன் எனவே எனக்குத் தகுதி இருக்கிறதா? இல்லையா? என்று பார்க்காமல் என்தகுதியை நோக்காமல் நின்தகுதியை நோக்கி யானையைப் பரிசாகத் தரவேண்டுமென வேண்டுகிறார். அதியமானிடம் என்னைப் பார்க்காமலே என்தகுதியை எப்படி அறிந்தான் என்று மானஉணர்வுடன் கேட்கும் பெருஞ்சித்திரனார் குமண வள்ளலிடம் என்தகுதியைக் கணக்கிடாமல் எனக்கு யானையைப் பரிசாகத் தரவேண்டுமெனக் கேட்கிறார் என்றால் இதனை மானஉணர்ச்சியின் வெளிப்பாடாகக் கொள்வது எவ்வாறு பொருந்தும்?. இதுபோன்றே பெருஞ்சித்திரனார் இளவெளிமானிடம் கோபப்படுவதையும் (புறம். 207) மதுரைக்குமரனார் சோழன் பெருந்திருமாவளவனிடம் கோபப்படுவதையும் (புறம். 197) மானஉணர்வின் வெளிப்பாடாகக் கொள்ள முடியுமா? என எண்ணிப் பார்க்கவேண்டும்.மேலே குறிப்பிட்ட புலவர்களின் பேச்சுக்களை எல்லாம் மானம் என்ற உயர்ந்த பண்போடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, புலவர்களின் உணர்வு வெளிப்பாடு தன்னலம் சார்ந்ததாகவும் பிறர்மேல் சினம்கொண்டு கூறும் வசைமொழிகளாகவும் உள்ளனவே அன்றி தன்தவறு பற்றித் தன்நெஞ்சமே வருத்த அதனால் உண்டாகும் உணர்ச்சியாக இல்லை.

ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று -குறள்.-967

என்ற குறளுக்கேற்பவோ,

என்பாய் உகினும் இயல்பில்லார் பின்சென்று
தம்பாடு உரைப்பரோ தம்முடையார் -நாலடி 292

வற்றிமற்று ஆற்றப் பசிப்பினும் பண்பிலார்க்கு
அற்றம் அறிய உரையற்க -நாலடி 78

என்ற நாலடியார் கூற்றிற்கேற்பவோ வாழ்பவர்களே மானமுடையார் என்று சிறப்பித்துக் கூறும் பெருமைக்குரியவர்கள். தம்முடைய வறுமைநிலையைப் பலபடக்கூறிப் பரிசில் பெற விழைபவர்கள் இந்த வரையறைக்குப் பொருந்தமாட்டார்கள். இப்படிப் புலவர்களின் வெளிப்பாட்டை மானஉணர்வின்கண் அடக்கமுடியாது என்பதால் புலவர்களின் பெருந்தகைமைக்கு ஏதும் இழுக்கு நேர்ந்துவிடாது. சமூகத் தகுதியிலும் பொருளாதார நிலையிலும் உயர்ந்த இடத்தில் இருந்த மன்னர்களிடத்து இதன் நேர்எதிரான நிலையில் இருந்த புலவர்கள் நெஞ்சுரத்தோடு தம் எதிர்ப்பை, கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார்கள் என்பதே சிறப்பிற்குரியதுதான்.

புறநானூற்று மன்னர்களும் மான உணர்வும்:

சேரமான் பெருஞ்சேரலாதன், சோழன் கரிகால் பெருவளத்தனோடு போரிட்டபோது கரிகால்வளவன் சேரலாதன் மார்பிலே எறிந்தவேல் அவன் உடலுக்குள் ஊடுருவி முதுகுவழியாகச் சென்றது. மார்பில் எறிந்தவேல் முதுகில் புண்ணை ஏற்படுத்தியதனால் சேரமன்னன் அதுவும் புறப்புண்ணுக்கு ஒப்பாகும் எனக்கருதி உயிர்வாழ விரும்பாமல் வடக்கிருந்து உயிர் துறந்தான். இதனை,புறப்புண் நாணி மறத்தகை மன்னன்வாள் வடக்கு இருந்தனன்

ஈங்குநாள் போற் கழியல ஞாயிற்றுப் பகலே! -புறம். 65.

என்று இத்தகு மான உணர்வுடைய வேந்தன் இல்லாமையால் ஞாயிற்றையுடைய பகல் இனி முன்போல் கழியாது என்று பாடுகிறார் கழாத்தலையார் என்ற புலவர். போரில் சேரமான் பெருஞ்சேரலாதன் தோல்வி அடைந்தாலும் புறப்புண் நாணி வடக்கிருந்ததால் வெற்றிபெற்ற கரிகால் வளவனைக் காட்டிலும் அவன் நல்லவன் என்று வெண்ணிக்குயத்தியார், வென்றோய் நின்னினும் நல்லன் அன்றே -புறம். 66என்று சேரமான் பெருஞ்சேரலாதனைப் புகழ்ந்தரைக்கின்றார்.சேரமான் கணைக்கால் இரும்பொறை சோழன் செங்கணானோடு போர்செய்து தோல்வி அடைந்து சோழனால் சிறையிலிடப் பெறுகிறான். தனக்கு ஏற்பட்ட நீர்வேட்கை மிகுதியால் சிறைக்காவலரை நீர் தருமாறு கேட்கிறான். அவர்கள் காலந்தாழ்த்தி நீர் தருகின்றார்கள். இம்மானக்கேட்டை நினைந்து நீரை அருந்தாமல் உயிர் துறக்கிறான் சேரமன்னன் இரும்பொறை.

குழவி யிறப்பினும் ஊன்தடி பிறப்பினும்
ஆஅள்அன்று என்று வாளின் தப்பார்
தொடர்ப்;படு ஞமலியின் இடர்ப்படுத் திரீஇய
கேள்அல் கேளிர் வேளாண் சிறுபதம்
மதுகையின்றி வயிற்றுத்தீத் தணியத்
தாமிரந் துண்ணும் அளவை
ஈன்ம ரோஇவ் வுலகத் தானே. -புறம். 74.

என்பது சேரமான் கணைக்கால் இரும்பொறையின் வாக்குமூலம் ஆகும்.அரசர்கள் தோல்வியுற்றுப் பகைவர்பால் துன்பமுற்று வாழ்வதையும் போர்க்களத்தில் புறப்புண் ஏற்படுவதையும் உண்ணுநீர் ஆயினும் பகைவரிடமிருந்து இரந்து பெறுதலையும் தம் மானத்திற்குப் பெரும் இழுக்காகக் கருதினார்கள் என்பதை மேற்கூறிய இரண்டு சான்றுகளும் புலப்படுத்துகின்றன. தம்மக்களோடு போரிட நேர்ந்தது குறித்து நாணி வடக்கிருந்து உயிர்துறந்த சோழமன்னன் கோப்பெருஞ்சோழனும், ஆராயாது தீர்ப்புரைத்தமைக்காக வருந்தி உயிர்நீத்த சிலப்பதிகாரத்துப் பாண்டிய நெடுஞ்செழியனும் இத்தகு மானஉணர்ச்சிக்குப் பெருமை சேர்த்தவர்களே. மேற்கூறிய மன்னர்கள் வாழ்க்கை பற்றிய செய்திகள் அனைத்திலும் அவர்கள் தம்பழிக்கு நாணியவர்கள் என்பதையும் தமது பழிக்குரிய செயலால் தம்குடிக்கு இழுக்கு நேர்ந்ததே என்று எண்ணியே தம் மானஉணர்ச்சியால் உயிர்கொடுத்துப் பழிதுடைத்தவர்களாக அவர்கள் விளங்கக் காண்கிறோம். இவர்கள் திருவள்ளுவர் கூறிய மருந்தோ மற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை என்பதற்கேற்பவும் உயிர் நீப்பர் மானம் வரின் என்பதற்கேற்பவும் தன் தவறு பற்றித் தன் நெஞ்சமே வருத்த அதனால் உண்டான உணர்ச்சியால் மானத்தைப் பேணியவர்கள்.

புறநானூற்றில் ஒரு விலங்கின் மானஉணர்ச்சி கூட உவமை வழியாகச் சோழன் நல்லுருத்திரன் என்ற மன்னனால் சுட்டிக்காட்டப்படுகிறது,

கடுங்கட் கேழல் இடம்பட வீழ்ந்தென
அன்றவன் உண்ணா தாகி வழிநாள்
பெருமலை விடரகம் புலம்ப வேட்டெழுந்து
இருங்களிற் றொருத்தல் நல்வலம் படுக்கும் -புறம். 190.

ஒரு புலி தான் தாக்கிய பன்றியொன்று இடப்பக்கம் வீழ்ந்ததால் மான உணர்ச்சியால் தன் செயலுக்கு நாணி அதனை உணவாகக் கொள்ளாமல் யானை ஒன்றைத் தாக்கி வலப்பக்கத்தில் வீழச்செய்து பசியாறியது என உவமையாகக் குறிப்பிடப்படுகின்றது.

தொகுப்புரை:
சங்ககால மக்கள் போற்றி ஒழுகிய மானம் என்பது உணவு முதலான வாழ்க்கைத் தேவைகளுக்காக அல்லாமல் உயர்ந்த கொள்கைகளைக் காப்பதற்காகத் தம் உயிரை இழக்கும் நிலை வந்தாலும் உவந்து ஏற்றுக்கொள்கிற பண்பாகும். தன்னலம் கருதிப் பிறர்மேல் கொள்ளும் கோபம் மானமன்று. தன்பழிக்குரிய செயலால் தம்குடிக்கு இழுக்கு நேராமல் உயிர் கொடுத்துப் பழிதுடைக்கும் ஒப்பற்ற பண்பாகும். இவ்வகையில் சங்ககாலப் புலவர்களின் கோப உரைகள் அவர்களின் நெஞ்சுரத்தைக் காட்டுமே அல்லாமல் அதனை அவர்தம் மான உணர்ச்சியின் வெளிப்பாடு என்பது பொருந்தாது. சங்ககால மன்னர்கள் சிலர் புறப்புண்ணுக்கு நாணியும், பகைவனிடம் நீர்வேட்கைக்காக மானம்கெட வாழ்தலை வெறுத்தும் உயிர்விட்ட செயலே மானம் என்றும் அதுவே சிறந்த பண்பு என்றும் துணிகின்றோம்.

4 comments:

said...

உங்கள் போன்ற தமிழறிஞர்களும் பதிவெழுத வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

உங்களின் பதிவுகள் மூலம் தமிழ் மொழி, தமிழ் மக்கள் வரலாறுகளைத் தெரிந்து கொள்ள மிகவும் ஆவலாக உள்ளேன்.

மிக்க நன்றி.

said...

பேராசிரியர் முனைவர் நா.இளங்கோ ஐயா அவர்களே,

தமிழ்பதிவுலகில் தமிழமுதம் தரப்போகும் மற்றொரு அட்சய பாத்திரமாக இருப்பீர்கள்.

வாழ்த்துக்கள் !

said...

//
1. பெருந்தலைச் சாத்தனார் என்ற புலவர் கடியநெடுவேட்டுவனிடம் பரிசில் பெறுவதற்காகச் சென்றபொழுது அவன் பரிசில்தரக் காலம் நீட்டித்ததைப் பொறுக்காமல் பாடிய பாடல் வரிகள் அவரின் மானஉணர்ச்சியை வெளிப்படுத்தியதாகக் குறிப்பிடுவார்கள். பெருந்தலைச் சாத்தனாரின் பாடல் வரிகள்,
முற்றிய திருவின் மூவர் ஆயினும்
பெட்பின்றி ஈதல் யாம் வேண்டலமே.
... .... .... .... .... ........ .... .... .... தேரொடு
ஒளிறு மருப்பு ஏந்திய செம்மல்களிறு
இன்று பெயரல பரிசிலர் கடும்பே. -புறம். 205.

இப்பாடலில் வரும் மூவேந்தராயினும் பேணாது, மதியாது தரும் பொருள் எமக்குத் தேவையில்லை என்று கூறும் புலவர் பாடலின் நிறைவுப் பகுதியில் தேர், யானைகளைப் பரிசிலாகப் பெறாமல் நாங்கள் பெயரமாட்டோம் என்கிறார். இது மானஉணர்வின் வெளிப்பாடா? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
//
முதல் வரிகள் மானத்தைப் பற்றிப் பேசுவது போல் தோன்றினாலும் அது நாம் தற்காலத்தில் புரிந்து கொள்ளும் மானம் என்பதன் பொருளுக்கு ஏற்றது என்று தோன்றுகிறது; தாமே தன்னிலை தாழ்தலால் வாழமாட்டாத குணம் மானம் என்ற பொருளைக் கொண்டால் அந்த வரிகள் மானத்தைப் பேசுவதாகத் தோன்றவில்லை.
கடைசி வரிகள் முதல் வரிகள் சொல்லும் தற்கால மானவுணர்வு என்னும் பொருளையும் தகர்க்கிறது. முழுப்பாடலையும் பார்க்க வேண்டும்.

-------

//இப்படிப் புலவர்களின் வெளிப்பாட்டை மானஉணர்வின்கண் அடக்கமுடியாது என்பதால் புலவர்களின் பெருந்தகைமைக்கு ஏதும் இழுக்கு நேர்ந்துவிடாது. சமூகத் தகுதியிலும் பொருளாதார நிலையிலும் உயர்ந்த இடத்தில் இருந்த மன்னர்களிடத்து இதன் நேர்எதிரான நிலையில் இருந்த புலவர்கள் நெஞ்சுரத்தோடு தம் எதிர்ப்பை, கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார்கள் என்பதே சிறப்பிற்குரியதுதான்.//
இதனை முழுதாக ஒத்துக்கொள்கிறேன். பெருமைப்பட வேறு எத்தனையோ இருக்கின்றன.

------

வேந்தர்களின் மான உணர்ச்சியைப் பற்றிய எடுத்துக்காட்டுகள் பல தகவல்கள் சொல்லின. மிக்க நன்றி.

------

//
தொகுப்புரை:
சங்ககால மக்கள் போற்றி ஒழுகிய மானம் என்பது உணவு முதலான வாழ்க்கைத் தேவைகளுக்காக அல்லாமல் உயர்ந்த கொள்கைகளைக் காப்பதற்காகத் தம் உயிரை இழக்கும் நிலை வந்தாலும் உவந்து ஏற்றுக்கொள்கிற பண்பாகும். தன்னலம் கருதிப் பிறர்மேல் கொள்ளும் கோபம் மானமன்று. தன்பழிக்குரிய செயலால் தம்குடிக்கு இழுக்கு நேராமல் உயிர் கொடுத்துப் பழிதுடைக்கும் ஒப்பற்ற பண்பாகும். இவ்வகையில் சங்ககாலப் புலவர்களின் கோப உரைகள் அவர்களின் நெஞ்சுரத்தைக் காட்டுமே அல்லாமல் அதனை அவர்தம் மான உணர்ச்சியின் வெளிப்பாடு என்பது பொருந்தாது. சங்ககால மன்னர்கள் சிலர் புறப்புண்ணுக்கு நாணியும், பகைவனிடம் நீர்வேட்கைக்காக மானம்கெட வாழ்தலை வெறுத்தும் உயிர்விட்ட செயலே மானம் என்றும் அதுவே சிறந்த பண்பு என்றும் துணிகின்றோம்.//

மிகத் தெளிவாகத் தொகுத்துச் சொன்னதற்கு மிக்க நன்றி.

நீங்கள் எடுத்துக்காட்டிய பாடல்கள் எல்லாம் புதிய திசையில் சிந்தனையை நடத்துகின்றன. தங்கள் ஆய்வுகளின் பயனை நாங்கள் பெறும்படி பதிவுகளில் எழுத முன் வந்ததற்கு மிக்க நன்றி.

said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in