புதுமைப் பித்தனும் தொன்ம மரபும்(அகலிகைக் கதைகளை முன்வைத்து)

புதுமைப் பித்தனும் தொன்ம மரபும்
(அகலிகைக் கதைகளை முன்வைத்து)

பேராசிரியர் முனைவர் நா.இளங்கோ,
இணைப் பேராசிரியர்,
பட்ட மேற்படிப்பு மையம்,
புதுச்சேரி - 8.

புதுமைப்பித்தன் தம் படைப்புகள் குறித்து சொன்ன வாசகங்களோடு கட்டுரையைத் தொடங்குவோம்.விமர்சகர்களுக்கு ஒரு வார்த்தை. வேதாந்திகள் கைக்குள் சிக்காத கடவுள் மாதிரிதான் நான் பிறப்பித்து விட்டவைகளும் அவை உங்கள் அளவுகோல்களுக்குள் அடைபடாதிருந்தால் நானும் பொருப்பாளியல்ல, நான் பிறப்பித்து விளையாட விட்டுள்ள ஜீவராசிகளும் பொறுப்பாளியல்ல. உங்கள் அளவுகோல்களைத்தான் என் கதைகளின் அருகில் வைத்து அளந்து பார்த்துக்கொள்ளுகிறீர்கள் என்று உங்களுக்குச் சொல்லிவிட விரும்புகிறேன். (பதி.ஆ. வேங்கடாசலபதி, புதுமைப்பித்தன் கதைகள், ப. 780)என்று புதுமைப்பித்தன் தன்படைப்புகள் குறித்து விமர்சகர்களுக்கு சொன்ன எச்சரிக்கையோடு அவரின் படைப்புகளை அணுகுவது பொருத்தமாயிருக்கும்.
இருபதாம் நூற்றாண்டு இலக்கிய வரலாற்றில் - சிறுகதை வரலாற்றில் தனக்கென ஒரு தனியிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ள புதுமைப்பித்தனைத் தூய கலை இலக்கியவாதிகளும் சோசலிச யதார்த்தவாதிகளும் ஒருசேரச் சொந்தம் கொண்டாடுவது புதுமை. இதுவே அவர் படைப்புகளின் சூட்சுமம். புதுமைப்பித்தன் எந்தக் கூண்டுகளிலும் சிக்கிக் கொள்ளாதவர். அவர் படைப்புகள் சோசலிசம், பெரியாரியம், காந்தியம், சித்த தத்துவம் எல்லாம் பேசும், அதே சமயம் அவற்றைக் கிண்டலடிக்கவும் செய்யும். சொ.விருத்தாசலம் என்ற இயற்பெயருடைய புதுமைப்பித்தன் வேறு பல புனைபெயர்களிலும் பத்திரிக்கைகளுக்கு எழுதியுள்ளார். சோ.வி., வே.கந்தசாமிக் கவிராயர், ரசமட்டம், கூத்தன், நந்தி, கபாலி, சுக்ராச்சாரி என்பன அவரின் சில புனைபெயர்கள். நூற்றுக்கும் மேற்பட்ட சொந்தச் சிறுகதைகள் படைத்ததோடு மட்டுமின்றி சுமார் நூறு மொழிபெயர்ப்புச் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், நாடகங்கள், குறுநாவல், திரைப்பட உரையாடல் என்று இலக்கியத்தில் பல துறைகளிலும் தம் படைப்புகளை உருவாக்கியவர் புதுமைப்பித்தன். புதுமைப்பித்தன் தன் கதைகளின் பொதுத்தன்மை நம்பிக்கை வறட்சி என்று சொல்லிக்கொண்டார், அதற்குக் காரணம் அவரின் வாழ்க்கைப் பின்னணி. அவரின் நம்பிக்கை வறட்சி மனிதர்கள் உண்டாக்கிய தர்மங்கள் குறித்ததாயிருந்தது. சாமான்ய மனிதர்களின் நடைமுறை வாழ்க்கையும் அவற்றின் அவலங்களும் அவரின் சிறுகதைகளில் அதிக இடங்களைப் பிடித்தன. சமூகத்தின் மீதான புதுமைப்பித்தனின் கோபமே, அவர் படைப்புகளில் கேலியாக, கிண்டலாக, நையாண்டிகளாக வெளிப்பட்டன. எத்தகைய அறங்களின் மீதும் தமக்கு நம்பிக்கையில்லை என்பதுபோல் அவர் காட்டிய பாசாங்கெல்லாம் சமூகம் குறித்த அவரின் எதிர்வினையே. புதுமைப்பித்தன் ஆங்கில வழியில் உலகின் பலமொழிப் புனைகதைகளைக் கற்றார். தமிழிலும் உயர்ந்த தரத்தில் சிறுகதைகளைப் படைக்க விரும்பி ஒவ்வொரு சிறுகதையையும் ஒரு சோதனை முயற்சி போல் செய்து பார்த்தார். அதனால்தான் அவர் கதைகள் எதுவும் ஒன்று போல் மற்றொன்று இருப்பதில்லை. தம்முடைய கதைகளை வெறும் சுவாரஸ்யத்திற் காகவோ கருத்துப் பிரச்சாரத்துக்காகவோ அவர் படைக்கவில்லை. புதுமைப்பித்தனின் ஒவ்வொரு கதையும் ஒரு பிரச்சனையைப் பேசும். பாத்திரங்களையோ, பிரச்சினைகளையோ மோதவிட்டுவிட்டுத் தன்னை இனங்காட்டிக் கொள்ளாமல் ஒதுங்கிக் கொள்வார். இது அவர்படைப்பின் பாணி. ஒரு தமிழ்வாசகன் புதுமைப்பித்தன் எழுத்துக்களுக்குள் எளிதில் நுழைந்து படைப்பை அனுபவிக்க முடிவதற்கு அவரின் விசேடமான கதைசொல்லும் முறையே ஒரு முக்கிய காரணம். தொன்ம வேர்முடிச்சுகளால் காப்பாற்றப் படும் இந்தியமரபு இழையோடும் மொழியும் கதையாடலுமே புதுமைப் பித்தன் கதைகளின் தனித்தன்மை. இந்தியத் தொன்ம இதிகாச மரபுகளும் சைவத் தமிழ் மரபும் கலந்து புதுமைப்பித்தனின் எழுத்துலகை ஆட்சி செய்வது வாசகர் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியத்துவம் வாய்ந்தது.

தொன்மம்:
இலக்கியவியல், உளவியல், மானிடவியல், சமூகவியல், மதஒப்பியல், நாட்டுப்புறவியல் போன்ற பல துறைகளில் தொன்மம் சொல் பயன்படுத்தப்படுகிறது. திறனாய்வுத்துறையின் முன்னோடி நார்த்ராப் பிரையின் தொன்மம் குறித்த விளக்கங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. தொன்மம் கடவுளர்களையோ கடவுளையொத்த மனிதர்களையோ பாத்திரங்களாகக் கொண்ட கதையென்றும் அது வரலாற்றுக் காலத்திற்கு அப்பாற்பட்டதென்றும் இயற்கையிழந்த நிகழ்ச்சிகளைக் கொண்டதாகவும் அமைந்திருக்கும் என்றும் கூறுவார். தொன்மங்கள் அதிக சிரத்தையோடு எடுத்துக்கொள்ளப்பட வேண்டியவை, உண்மையிவேயே நிகழ்ந்ததாக நம்பப்படுபவை. எல்லா இலக்கிய வகைகளும் தொன்மத்திலிருந்தே தோற்றமுற்றன என்பது அவர் கருத்து. ( பா.மருதநாயகம், தொன்மத் திறனாய்வு, ப-ள். 12-13)
இலக்கியப் படைப்பிற்கான அடிக்கருத்துக்கள் எல்லாமும் தொன்மங்களிலிருந்தே தோற்றம் பெற்றன என்று நார்த்தராப் பிரையின் கருதுவார். பெரும்பாலும் தொன்மங்கள் மனிதன், விலங்கு, தாவரம் ஆகியவற்றின் தோற்றம் பற்றியும் மனிதன் எவ்வாறு இப்பொழுது உள்ள நிலைக்கு, அதாவது இறப்பு, பால்உணர்வு, பலவகையான சமூகக் கட்டுப்பாடுகள் ஆகியவற்றிற்கு ஆட்பட்டவனாக வந்து சேர்ந்தான் என்பன பற்றியும் விளக்குகின்றன. விகோ(ஏiஉழ) எனும் அறிஞர் தமது புதிய விஞ்ஞானம் எனும் நூலில் நுண்ணிய சிந்தனைகள் தொன்மக் கருத்துக்களிலிருந்தே வெளிப்படுகின்றன என்றும் கவிதைக்கு இதுவே அடிப்படை என்றும் மனிதன் கற்கவேண்டிய முதல் விஞ்ஞானம் தொன்மமே என்றும் சுட்டிக் காட்டினார். அவர் கருத்தில் தொன்மங்கள் என்பவை உண்மையான நிகழ்ச்சிகள் அல்லது வரலாற்று நிகழ்ச்சிகளின் கற்பனை வடிவங்கள் ஆகும். ( பா.மருதநாயகம், தொன்மத் திறனாய்வு, ப. 7)தொன்மங்களை உருவாக்கியவர் யார்? என்ற கேள்விக்கு உளவியல் அறிஞர் யுங் தரும் விளக்கம் ஆழமானது, மனித இனம் முழுவதற்கும் பொதுவான அடிமனக்கூறு ஒன்று உண்டென்றும் அதிலிருந்தே தொன்மங்கள் வெளிப்படுகின்றன என்றும் யுங் கருதினார். எனவேதான் பலநாட்டுப் பல இனமக்களிடமும் காணப்படும் தொன்மங்களில் வியத்தகு ஒற்றுமைகளைக் காணமுடிகிறது என்று அவர் விளக்கமளித்தார். ‘புராணங்களிலும் இதிகாசங்களிலும் வெளிப்படுவது ஒரு குறிப்பிட்ட தனிநபரின் தனிச்சிந்தனை அல்ல, மக்களின் கூட்டுச்சிந்தனையே ஆகும்’ என்று மாக்சிம் கார்க்கியும் தொன்மங்களை விளக்கியுள்ளார். ஆரம்பக் காலத்து மனிதம், தான் எதிர்கொண்ட இயற்கையைத் தன் காலத்திய அறிவினால் புரிந்து கொள்ள முயன்ற முயற்சியின் வெளிப்பாடே இத்தொன்மங்களாகும். மனித மனத்தின் கற்பனை ஆற்றலையும் வாழ்க்கை அனுபவத்தின் மூலம் வெடித்த முதல் கலை அமைப்பையும் இத்தொன்மங்கள் வெளிப்படுத்தி நின்றன. பின்னால் வர்க்க சமுதாயம் உருவான போது இந்தத் தொன்மங்களில் இருந்துதான் மதக் கடவுள்களுக்கான கதைகள் மாற்றி உருவாக்கம் செய்யப்பட்டன. (க.பஞ்சாங்கம், தொன்மத் திறனாய்வு, ப.ள். 114-115)
தொன்மங்கள் இறுகிய பாறைகள் அல்ல. உயிர்த் துடிப்புள்ளவை, சமூகம், காலத்துத் தேவைகளுக்கேற்ப தொன்மங்களைப் பயன்படுத்திக் கொள்கிறது. சமூகம் மட்டுமல்ல சமூகத்தின் ஒவ்வொரு அங்கமும் அவரவர்களின் கருத்துலகிற்கு ஏற்பத் தொன்மங்களைப் பயன்படுத்திக் கொள்கின்றன. இந்தியச் சூழலில் ஆரிய திராவிட அரசியல் நிலைப்பாடுகளுக்கு இத்தொன்மங்களே களங்களாயின. ஊடகங்கள் இந்துத்துவ பெருமரபைத் தூக்கிப் பிடிக்க இத்தொன்மங்களைப் பயன்படுத்துகின்றன. படைப்பாளிகளும் தொன்மங்களையே படைப்பின் அடிக்கருத்துக்களாகவும் பரப்புரைகளாகவும் உத்திகளாகவும் அமைத்து வெற்றி பெறுகின்றார்கள். எனவேதான் ரெனிவெல்லாக், ‘உலகப் புகழ்பெற்ற படைப்புகள் எல்லாம், புதிதாகக் கதையை உருவாக்கிப் படைக்கப்பட்டவைகளை விட, பழைய தொன்மங்களின் மேல் மறுபடைப்புச் செய்யப் பட்டவைகளாகவே இருக்கின்றன’ என்கிறார். (க.பஞ்சாங்கம், தொன்மத் திறனாய்வு, ப. 118)உலக இலக்கியப் பயிற்சி மிக்க புதுமைப்பித்தனும் தொன்மமரபுகளை மறுஆக்கம் செய்யும் படைப்பு உத்தியைத் தம் சிறுகதைகள் பலவற்றில் கையாண்டு வெற்றி பெற்றுள்ளார். புதுமைப்பித்தன், இந்தியத் தொன்மங்களில் பரந்த வீச்சுடைய இராமாயணக் கதையை விகடக்கதையாக்கிப் பகடி பண்ணுகிறார். இராமாயணக் கதையைத் தலைகீழாக்கி விகடம் பண்ணுவதற்குப் பாரதியைத்தான் முன்னோடி எனச் சொல்ல வேண்டும். நிஜமான ராமாயணக் கதை என்று அவரே கிண்டலாகக் குறிப்பிடும் அவருடைய குதிரைக் கொம்பு என்ற கதையில் இராவணன் கதைத் தலைவன், இராம- லக்குமணர் எதிரிகள், மூத்தவன் பரதனுக்குப் பட்டம் கட்டக்கூடாது, தனக்கே கட்டவேண்டும் என்று இராமன் லக்குவணோடு சேர்ந்து கலகம் பண்ணுகிறான். இதனால் நாட்டைவிட்டுத் துரத்தப்படுகிறான். போகும்போது இராமன் சீதையைத் தூக்கிச் செல்ல, தொடர்ந்து சென்று இராவணன் சீதையை மீட்கிறான். முடிவில் இராம- லக்குமணர்கள் திருந்துகிறார்கள்! புதுமைப்பித்தனின் நாரத ராமாயணம், இராஜாஜியின் பச்சாதாபம் கதைகளுக்குப் பாரதியின் குதிரைக்கொம்பு முன்னோடியாகக் காணப்படுகிறது. (ராஜ் கௌதமன், புதுமைப்பித்தன் எனும் பிரம்மராட்சஸ், ப.20)இப்படித் தொன்மக் கதைமரபுகளை நவீன உத்தியால் கேலிச் சித்திரங்களாக்கிப் பகடி பண்ணுவது மேலை இலக்கிய படைப்பாக்க உத்திகளிலிருந்து பெறப்பட்டது.
காலந்தோறும் தொன்மங்கள் மறுபடைப்பாக்கம் பெறுவது எல்லா மொழி இலக்கியங்களிலும் வழக்கமானதுதான் என்றாலும் புதுமைப்பித்தன் போன்றவர்கள் தொன்ம மரபுக் கதைகளைத் தம் படைப்பாக்கத்திற்குப் பயன்படுத்தும்போது புதிய மதிப்பீடுகளை அத்தொன்மங்களில் இடம்பெறச் செய்வதோடு புதிய விமர்சனங்களையும் அதனுள் பொதித்து வைக்கின்றார்கள். புதுமைப்பித்தன் தம் எழுத்துக்கள் முழுவதிலும் இந்தியத் தொன்ம இதிகாச மரபுகளையும் சைவத் தமிழ் தொன்மமரபுகளையும் ஊடுபாவாகக் கையாளுகிறார். நூற்றுக்கும் மேற்பட்ட அவருடைய படைப்புகளில் மறுஆக்கம் செய்யப்பெற்ற தொன்மங்கள் பல என்றாலும் எல்லை கருதி இராமாயணம், மகாபாரதம் என்ற இரண்டு இதிகாசங்களிலும் இடம்பெறும் அகலிகைத் தொன்மமரபைப் புதுமைப்பித்தன் எவ்வாறு கையாண்டுள்ளார் என்பதை இக்கட்டுரை ஆய்கிறது.

அகலிகைத் தொன்மம்:
வடமொழியில் முதல்காவியம் செய்த வான்மீகியே முதன்முதலில் அகலிகைக் கதைக்கு இலக்கிய உருவம் கொடுத்தார். வான்மீகி சொன்ன கதை இது,மகாமுனி கௌதமரும் அகலிகையும் ஆசிரமம் அமைத்து வாழ்ந்து வந்தனர். அகலிகையின் அழகில் மயங்கிய இந்திரன் அவளை அடையும் நோக்கத்துடன் ஒருநாள் கௌதமன் ஆசிரமத்தில் இல்லாத நேரம் பார்த்து கௌதமனாகி உருமாறி வந்து நாம் இப்போதே கூடுவோம் என்றான். வந்திருப்பது கணவன் இல்லை, தேவேந்திரனே என்பதைத் தெரிந்துகொண்ட அகலிகை, இந்திரனே நம்மைத் தேடிவந்துள்ளானே என்று தன் அழகைப்பற்றி கர்வப்பட்டு அவனுக்கு உடன்பட்டாள்.பிறகு தேவேந்திரனே விரைந்து புறப்படு, அபாயத்திலிருந்து உன்னைக் காத்துக்கொள் என்று எச்சரித்து அனுப்ப, உனக்கு நன்றி என்றுகூறி தேவேந்திரன் புறப்படும் வேளையில் அங்குவந்த கௌதமன் இந்திரன் வேடத்தைக் கண்டு நடந்தவற்றை உணர்ந்துகொண்டார்.மூடனே! என் வேஷத்தைத் தரித்துக்கொண்டு ஆசிரமத்தில்புகுந்து தகாததைச் செய்த நீ ஆண்மை இழக்கக்கடவாய் என்று இந்திரனுக்கு சாபமிட்டார். அகலிகையே! நீ இங்கே நீண்டகாலம் காற்றே உணவாக எந்தவொரு ஆகாரமுமின்றிச் சாம்பல்மேல் படுத்து யார் கண்ணுக்கும் தென்படாமல் மறைந்து வசிப்பாயாக. பலகாலம் கழித்து இங்கு வரப்போகும் இராமன் பாதம் ஆசிரமத்தில் படும்போது உன் பாவம் நீங்கும் என்று அகலிகைக்குச் சாபமிட்டார்.
தமிழில் முதன்முதலில் அகலிகைத் தொன்மம் இடம்பெற்ற நூல் பரிபாடல். மிகச்சுருக்கமாக அகலிகைக் கதை இந்நூலில் இடம்பெற்றுள்ளது. திருப்பரங்குன்றத்தில் உள்ள ஓவியச் சாலையில் இடம்பெற்றுள்ள பல ஓவியங்களைக் கண்டு வருவோர், இந்த ஓவியத்தைச் சுட்டிக்காட்டி, இந்திரன் ப+சை இவள் அகலிகை இவன் சென்ற கவுதமன் சினனுறக் கல்லுருஒன்றிய படியிதென்று உரை செய்வோரும் (நப்பண்ணனார், பரிபாடல், பா. 19)‘இவ்வுருவம் பூனைவடிவமெய்திய இந்திரனது, இவள் அகலிகை, இவன் கௌதமன், இவன் கோபித்தலால் இவள் கல்லுருவானவாறு இது’ என்று மக்கள் பேசிச்சென்ற காட்சியை வருணிக்கும் பகுதியில் அகலிகைக் கதை இடம்பெற்றுள்ளது. இந்திரன் பெற்ற சாபம் பற்றிய குறிப்பு இப்பகுதியில் இடம்பெறவில்லை, ஆனால் பரிபாடலின் ஒன்பதாம் பாடலில் குன்றம்ப+தனார் செவ்வேளின் மனைவி தேவசேனையைக் குறிக்குமிடத்தில் ‘ ஐயிரு நூற்று மெய்ந் நயனத்தவன் மகள்’ என்று குறிப்பிடும் இடத்தில் இந்திரன் ஆயிரம் கண்ணுடையவன் என்று சுட்டப்படுவதால் இந்திரன் சாபம் நினைவுக்கு வருகின்றது. பரிபாடல் கூறும் வடிவத்திலேயே கம்பர் தம் இராமகாதையில் இக்கதையை விவரித்துள்ளார். கௌதமருடைய சாபத்தைப் பொருத்தவரையில் வான்மீகத்திலிருந்து வேறுபடும் கம்பர் அகலிகையின் பாத்திரப்படைப்பிலும் மிக முக்கியமானதொரு மாற்றத்தைச் செய்கின்றார். தவறிழைத்த அகலிகையைக் கம்பன், ‘நெஞ்சினால் பிழைப்பிலாதாள்’ என்றே விசுவாமித்திரர் வாயிலாகக் குறிப்பிடுகின்றான். அதுமட்டுமின்றி, சாபவிமோசனத்திற்குப் பின் இராமன் கௌதமரை வணங்கி, ‘மாசறு கற்பின் மிக்க அணங்கினை அவன்கை ஈந்து’ தன் பயணத்தைத் தொடர்ந்ததாகவும் குறிப்பிடுகின்றான் கம்பன். கம்பன் செய்த இந்த மாற்றங்களுக்குப் பிறகு அகலிகைத் தொன்மம் வடமொழித் தொன்மத்திலிருந்து தமிழ்த் தொன்மமாக மாற்றம் பெறுகின்றது.
கம்பருக்குப் பின்னர் அகலிகைத் தொன்மத்தை விரிவான வகையில் தனிநூலாக இருநூற்றுத் தொண்ணூற்றைந்து வெண்பாக்களால் உருவாக்கித் தந்தவர் வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலியார். அவர் செய்த நூல் அகலிகை வெண்பா. இருபதாம் நூற்றாண்டில் அகலிகைத் தொன்மம் மீண்டும் மீண்டும் பலராலும் மறுபடைப்பாக்கம் செய்யப் பெற்றுள்ளது. அப்படைப்புகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் குறிப்பிடத் தக்க படைப்பாக விளங்குகின்றன. புதுமைப் பித்தனும் அகலிகைத் தொன்மமும்: அகலிகைத் தொன்மத்தைக் கையாண்டு அகல்யை, சாப விமோசனம் என்ற இரண்டு சிறுகதைகளைப் படைத்துள்ளார் புதுமைப்பித்தன். அகலிகைத் தொன்மத்தைப் பொறுத்தமட்டில் இருவேறு மரபுகள் காணப்படுகின்றன. ஒன்று வடமொழி அகலிகைத் தொன்ம மரபு, மற்றொன்று தமிழ் அகலிகைத் தொன்ம மரபு. இப்படி இருவேறு மரபுகளாகக் கணக்கில் கொள்ளும் வகையில் இரண்டு மரபுகளும் மாறுபடுகின்றன. வடமொழி அகலிகைத் தொன்மத்தில் வந்திருப்பவன் இந்திரன் என்று தெரிந்தே அவனுடன் கூடுகிறாள் அகலிகை, கல்லாகும் சாபம் அவளுக்கு இல்லை. தமிழ் அகலிகைத் தொன்மத்தில் வந்திருப்பது இந்திரன் என்று அறியாமல் கணவன் என்று நினைத்தே அகலிகை அவனுடன் கூடுகிறாள். மனதால் களங்கமற்றவள் என்று சித்தரிக்கப்படுகிறாள். கௌதமனால் கல்லாகுமாறு சபிக்கப்படுகிறாள். இந்த இருவகை அகலிகைத் தொன்மங்களும் இருபதாம் நூற்றாண்டின் நவீன படைப்பாளிகளுக்கு பயன்படுகின்றன. புதுமைப்பித்தன் இவற்றில் அகலிகைத் தமிழ்த் தொன்ம மரபையே தம் படைப்புகளில் பயன்படுத்துகின்றார். முதல்கதை அகல்யை 1934-இல் எழுதப்பட்டது. இரண்டாம் கதை சாபவிமோசனம் 1943-இல் எழுதப்பட்டது. இரண்டு கதைகளும் படைப்புத் தளத்தில் வேறு வேறு கோணங்களில் படைக்கப்பட்டுள்ளன. முதல்கதை அகல்யாவில் வரும் பாத்திரங்களான அகலிகை, கௌதமர், இந்திரன் என்ற பெயர்கள்தாம் தொன்மப்பெயர்கள், சம்பவங்கள் எல்லாம் இயற்கையானவை. இயற்கை இகந்த புனைவுகளே கதையில் இல்லை. இந்திரன் கோழிபோல் கூவுகிறான், கோழியாக வடிவெடுத்து வரவில்லை. இந்திரன் பூனைபோல் மெதுவாக வருகிறான், பூனையாகவில்லை. இந்திரன் இந்திரனாகவே அகலிகையைக் கூடுகிறான், கௌதமன் வேடத்தில் வரவில்லை. அகலிகை கல்லாகவில்லை, இந்திரன் சாபம் பெறவில்லை, இந்திரனை கௌதமர் மன்னித்துவிடுகிறார். கதை முழுமையும் நடப்பியலோடு இணைந்துசெல்கிறது. கௌதமர்தான் இலட்சியக் கதாபாத்திரமாகிறார். ‘மனத் தூய்மையில்தான் கற்பு. சந்தர்ப்பத்தால் உடல் களங்கமானால் அபலை என்ன செய்ய முடியும்.’ (பதி.ஆ. வேங்கடாசலபதி, புதுமைப்பித்தன் கதைகள், ப. 135) கௌதமரின் இந்தக் கேள்வி கற்பொழுக்கம் பற்றிய புதிய விளக்கத்தை வாசகனுக்குத் தருகிறது. கௌதமரின் இந்த வாசகத்தை இருபதாம் நூற்றாண்டின் கற்புக் கோட்பாடு எனலாம். மனத் தூய்மைதான் கற்பு, உடல் களங்கம் கற்புக்கேடு ஆகாது என்ற இக்கூற்றைக் கொஞ்சம் ஆழ்ந்து நோக்கலாம். உடல் களங்கம் என்பதில் வரும் களங்கம் என்றசொல் கற்பு பற்றிய பழைய தொன்மங்களை அப்படியே போற்றிப் பாதுகாக்கின்றமையை உணரமுடியும். தூய்மை, களங்கம் என்ற இரண்டு சொற்களும் பெண்உடல் குறித்த ஆண்மைய வாதங்களையே இங்கு முன்வைக்கின்றது.
இரண்டாவது கதை சாப விமோசனம். அகலிகை, இராமனால் சாப விமோசனம் பெற்றபின் வாழ்ந்ததாகப் புதுமைப்பித்தனால் கற்பனை செய்யப்பட்ட வாழ்க்கையைப் பேசுகிறது இக்கதை. இதிகாசக் கதையாகவே, இதிகாசக் கதையின் நீட்சியாகவே இதனைப் படைக்கிறார் புதுமைப் பித்தன். சாப விமோசனம் புதுமைப்பித்தன் படைப்புகளில் தனிச்சிறப்புடையது, தமிழின் மிகச்சிறந்த சிறுகதைகளில் ஒன்றாகப் பேசப்படுவது. கதையைத் தொடங்குமுன்னே ‘ராமாயண பரிச்சய முள்ளவர்களுக்கு இந்தக்கதை பிடிபடாமல் (பிடிக்காமல் கூட) இருக்கலாம். அதை நான் பொருட்படுத்தவில்லை.’ ஆசிரியரின் இத்தனிக்கூற்று முன்னுரையாக இடம்பெற்றுள்ளது. அகலிகை இராமனால் சாப விமோசனம் பெறுவதில் கதை தொடங்குகிறது. இராமன் கால்துகள் பட்டுச் சிலை பெண்ணாகிறது. ‘நெஞ்சினால் பிழை செய்யாதவளை நீ ஏற்றுக் கொள்வதுதான் பொருந்தும்’ (மேற். நூ. ப.529) என்கிறார் விசுவாமித்திரர் கோதமனிடம். கோதமன் அகலிகை வாழ்க்கை மீண்டும் தொடங்குகிறது. அகலிகை மனதால் களங்கமற்றவள் என்பதை கோதமர் ஏற்றுக்கொள்கிறார். ஆனால் ஊர் உலகம் அவளைத் தூற்றுகிறது. ‘சாப விமோசனம் கண்டாலும் பாப விமோசனம் கிடையாதா? ‘ (மேற். நூ. ப.535) இராமாயணக் கதை நெடுகிலும் அகலிகைக் கதை தொடர்கிறது. சீதை சிறை மீட்புக்குப் பின் சீதையும் இராமனும் ஒருநாள் அகலியைக் காண வருகின்றனர். அகலிகை சீதை இவர்களின் தனித்த உரையாடலில் இலங்கையில் நடந்த சம்பவங்களைச் சீதை சொல்லிக்கொண்டிருந்தாள். சாப விமோசனம் கதையின் உச்சம் இப்பகுதி,அக்கினிப் பிரவேசத்தைச் சொன்னாள். அகலிகை துடித்துவிட்டாள்.அவர் கேட்டாரா? நீ ஏன் செய்தாய் என்று கேட்டாள்.அவர் கேட்டார், நான் செய்தேன் என்றாள் சீதை அமைதியாக.அவன் கேட்டானா? என்று கத்தினாள் அகலிகை, அவள் மனசில் கண்ணகி வெறி தாண்டவமாடியது. அகலிகைக்கு ஒரு நீதி, அவனுக்கு ஒரு நீதியா? ஏமாற்றா? கோதமன் சாபம் குடலோடு பிறந்த நியாயமா? இருவரும் வெகுநேரம் மௌனமாக இருந்தனர்.உலகத்துக்கு நிரூபிக்க வேண்டாமா? என்று கூறி மெதுவாகச் சிரித்தாள் சீதை.உள்ளத்துக்குத் தெரிந்தால் போதாதா? உண்மையை உலகுக்கு நிரூபிக்க முடியுமா? என்றாள் அகலிகை. வார்த்தை வறண்டது.நிரூபித்துவிட்டால் மட்டும் அது உண்மையாகிவிடப் போகிறதா, உள்ளத்தைத் தொடவில்லை யானால்? நிற்கட்டும், உலகம் எது? என்றாள் அகலிகை. (மேற். நூ. ப.539) மனதால் களங்கமற்று இருந்தாலே போதும் என்று அகலிகைக்கு பேசப்பட்ட அறம், சீதை விசயத்தில் உலகத்துக்கு நிரூபிக்க வேண்டாமா? என்றாகிறதே, ஏன்? அகலிகைக்கு ஒரு நீதி அவனுக்கு ஒரு நீதியா? ஊருக்கு உபதேசம் செய்துவிட்டுத் தன் மனைவி என்கிற போது நியாயம் ஏன் மாறுகிறது? எது மாற்றுகிறது? கோதமன் சாபம் குடலோடு பிறந்த நியாயமா? என்று கொதிக்கும் அகலிகை மீண்டும் கல்லாகிறாள்.
புதுமைப்பித்தனின் இந்தச் சாப விமோசனம் கதை ஆழ்ந்து படிப்போர்க்கு இரண்டு சிக்கல்களை எழுப்பியிருப்பதாக க. கைலாசபதி கருதுகிறார்.

1. நெருக்கடி ஏற்படும் பொழுது கணவன் மனைவி உறவுப் பிரச்சனை எப்படித் தோன்றுகிறது, அதாவது மனித உறவுகள் பற்றிய சிக்கல்.

2. ஒழுக்கம், அறம் என்பவைக்கும் வாழ்க்கைக்கும் எவ்வாறு முரண்பாடு தோன்றுகிறது, அதாவது அறவியல் - பெற்றுள்ள வலிமை பற்றிய சிக்கல் (க.கைலாசபதி, அடியும் முடியும், ப.156)

மனித உறவுகள் பற்றிய சிக்கலையும், அறவியலின் வலிமை பற்றிய சிக்கலையும் பேசும் சாப விமோசனம் இச்சிக்கல்களுக்கு வெளிப்படையாக விடைகூறவில்லை என்பார் கைலாசபதி. அகலிகைத் தொன்மத்தை மறுபடைப்பாக்கம் செய்த பலரும் உளவியல் நோக்கிலேயே இத்தொன்மத்தை அணுகியுள்ளார்கள். புதுமைப்பித்தனும் சாப விமோசனம் பெற்ற பின்னர் அகலிகை, கோதமன் இருவரின் மனதிலும் இழையோடும் குற்ற உணர்ச்சி பற்றிப் பலபடப் பேசுகிறார். அகலிகைக்கு அச்ச உணர்ச்சியே மேலோங்கி நின்றது. இயல்பான பேச்சு இல்லை, மற்றவர் பேச்சையும் இயல்பாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. அகலிகைக்கு பயம் நெஞ்சில் உறையேறிவிட்டது. ஆயிரம் தடவை மனசுக்குள் திருப்பித் திருப்பிச் சொல்லிப் பாடம் பண்ணிக்கொண்டு, அந்த வார்த்தை சரிதானா என்பதை நாலு கொணத்திலிருந்தும் ஆராய்ந்து பார்த்துவிட்டுத்தான் எதையும் சொல்லுவாள். கோதமன் சாதாரணமாகச் சொல்லும் வார்த்தைகளுக்குக் கூட உள்ளர்த்தம் உண்டோ என்று பதைப்பாள். (பதி.ஆ. வேங்கடாசலபதி, புதுமைப்பித்தன் கதைகள், ப. 531)கோதமனுக்கு அவளிடம் முன்போல் மனக் களங்கமின்றிப் பேச நாவெழவில்லை. அவளை அன்று விலைமகள் என்று சுட்டது, தன்நாக்கையே பொசுக்க வைத்துவிட்டது போல இருக்கிறது. என்ன பேசுவது? என்ன பேசுவது? … இருவரும் இருவிதமான மனக்கோட்டைக்குள் இருந்து தவித்தார்கள்.கோதமனுக்குத் தான் ஏற்றவளா? என்பதே அகலிகையின் கவலைஅகலிகைக்கு தான் ஏற்றவனா என்பதே கோதமனின் கவலை (மேற். நூ. ப.530)சேர்ந்து வாழ்ந்தாலும் இருவரும் இரண்டு விதமான மனக்கோட்டைகளுக்குள் வாழ நேர்ந்ததால் ஏற்படும் உளவியல் சிக்கல்களே சாப விமோசனம் கதையின் முதல்பாதி.
சாப விமோசனம் கதையின் இரண்டாம் பாதி, இராமன் கதை என்ற ஒற்றைத் தொன்மத்திற்குள் இயங்கும் சீதை, அகலிகை என்ற இரட்டைத் தொன்மங்களைக் குறித்தது. அதாவது சீதைத் தீக்குளிப்பு ஒரு தொன்மம், இத்தொன்மம் கற்பு- நெருப்பு- உலகம் என்பதோடு தொடர்புடையது. அகலிகை கல்லுயிர் பெறல் மற்றுமொரு தொன்மம், இத்தொன்மம் கற்பு- உடல்-மனம் என்பவற்றோடு தொடர்புடையது. இந்த இரண்டு தொன்மங்களையும் இணைக்கும் தொன்மம் இராமன் குறித்த தொன்மம். சீதை, அகலிகை என்ற இரண்டு தொன்மங்களுக்குள் இயங்கும் செயல்பாடுகள் ஒரே வாய்பாட்டில் இயங்குகின்றன. ஒத்த வாய்பாட்டில் இயங்கும் இக்கதைகளில் மாறுபடும் மதிப்பீடுகள் குறித்த விசாரணையே புதுமைப்பித்தனின் சாப விமோசனம் முன்வைக்கும் சிக்கல். இச்சிக்கல் அகலிகை வழியாக எழுப்பப்படுகிறது. தொன்மத்தில் இது அகலிகையின் குரலாக ஒலித்தாலும், வரலாறு நெடுகிலும் பெண்களின் ஒற்றைக் குரலாகவே எதிரொலிக்கின்றது.

சீதை, அகலிகைத் தொன்மங்களின் செயல்பாடுகள்:
1. சீதை கடத்தல்
தீக்குளிப்பு மரணம்
இராமன் இராவணன்

2. அகலிகை பாலுறவு
கல்லாதல் சாபம்
கோதமன் இந்திரன்

மேலே உள்ள வரைபடங்கள், இரண்டு தொன்மங்களும் செயல்பாடுகளின் வழி ஒரே வாய்பாட்டில் இயங்குவதை உணர்த்துகின்றன. இரண்டு தொன்மங்களிலும் இராமனும் கோதமனும் பரிசுத்தமானவர்களாக இருக்கின்றனர். ஆண்கள் பரிசுத்தமாயிருக்கும் போது பெண்களும் அப்படியிருக்க வேண்டும் என்று நினைப்பதில்- நிர்ப்பந்திப்பதில் என்ன தவறு? என்பது போன்ற தர்க்கம் இரண்டு தொன்மங்களிலும் கட்டமைக்கப்படுகிறது. ஆனால் இராவணன், இந்திரன் ஆகிய இரண்டு ஆண்களின் பாலியல் மீறல்கள் ஓரங்கட்டப்படுகின்றன. ஆண்களின் பாலியல் மீறல்கள் உள்ள சமூகத்தில் பெண்கள் உடலாலும் மனத்தாலும் களங்கப்படாமல் இருக்க வேண்டும் என்று நிர்ப்பந்திப்பது எப்படிச் சாத்தியமாகும். ‘ஆப்பிளின் ஒரு பாதியைத் தின்றுவிட்ட பிறகு முழு ஆப்பிளைக் கையில் வைத்திருக்க முடியாது என்பதைப்போல்’ என்று இதனை விளக்குவார் எங்கல்ஸ் (எங்கல்ஸ், குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம், ப.110) சீதையின் தீக்குளிப்பு அகலிகையின் மனதில் கோபக்கனலை எழுப்பிவிடுகிறது. அவர் கேட்டாரா? என்று இயல்பாகத் தொடங்கிய அகலிகையின் பேச்சில் இராமன்தான் கேட்டான் என்று தெரிந்ததும் அவன் கேட்டானா? என்று அனல் வீசத் தொடங்குகிறது. இதனைக் கண்ணகி வெறி என்கிறார் புதுமைப்பித்தன். தீக்குளிப்பு பற்றிய சீதையின் எதிர்வினை என்னவாக இருந்தது? அகலிகைபோல் வெளிப்படையாக எதிர்க்குரல் எழுப்பவில்லை சீதை. மாறாக, ‘உலகத்துக்கு நிரூபிக்க வேண்டாமா? என்று கூறி மெதுவாகச் சிரித்தாள் சீதை.’ என்ற புதுமைப்பித்தன் வரிகளில் வரும், மெதுவாகச் சிரித்தாள் என்பதில் சீதையின் கேலியும், கிண்டலும், கோபமும், ஆத்திரமும், இயலாமையும், அழுகையும் அடுக்கடுக்காக வெளிப்படுவதை உணரமுடியும். உலகத்துக்கு நிரூபிக்க வேண்டாமா? என்று வேண்டுமென்றே அகலிகையின் கோபத்தைக் கிளறிவிடும் வார்த்தையைக் கையாளுகிறாள் சீதை. தான் பேசாததை யெல்லாம், பேச வேண்டியதை யெல்லாம் அகலிகை பேசுகிறாள் என்பதால். பேசட்டும்.. பேசட்டும்.. வரலாற்றின் வழிநெடுகிலும் ஒடுக்கப்பட்ட பெண்களின் குரல், குரல்வளை நெறிக்கப்பட்ட பெண்களின் கோபக்குரல், உள்ளுக்குள் மகிழ்கிறாள் சீதை. சீதையின் மௌனம், சீதை பேசாத பேச்சு அது. புதுமைப்பித்தன் கையாண்ட எத்தனையோ தொன்ம மரபுகளில் அகலிகைத் தொன்மம் மிகுந்த தனித்துவம் உடையது. அகலிகை மீண்டும் கல்லானது உளவியல் சார்ந்தது என்றாலும், அறங்கள் குறித்த அகலிகையின் விசாரணை சமூகம் பற்றியது, சமூகக் கட்டுமானங்கள் பற்றியது. சாப விமோசனத்தில் அகலிகை இரண்டு விவாதங்களைத் தொடங்கி வைக்கிறாள்.

1. மனிதனா? தர்மமா? எது முக்கியம் என்ற வினா.
2. இரண்டாவது, உள்ளமா? உலகமா?

இரண்டில் எதற்கு நாம் உண்மையாய் இருக்க வேண்டும் என்ற வினா. கைகேயியிடம் உரையாடும் தருணத்தில் அகலிகை தர்மங்கள் குறித்த சர்ச்சையைக் கிளப்புகிறாள், ‘மனிதருக்குக் கட்டுப்படாத தர்மம், மனித வம்சத்துக்கு சத்துரு’ இது அகலிகையின் வாதம். இவ்வாதத்தில் தர்மத்துக்கு முதன்மையில்லை, மனிதத்திற்கே முதன்மை. ‘உள்ளத்துக்குத் தெரிந்தால் போதாதா? உண்மையை உலகத்துக்கு நிரூபிக்க முடியுமா?’ என்ற வாதத்தில் அகலிகை உள்ளமா? உலகமா? என்ற வினாவிற்கு அவளே விடையும் கூறுகிறாள். உலகம் எது? என்ற அகலிகையின் கேள்வியே இதற்கு பதிலாகிறது. காலம், இடம், நபர் சார்ந்து உண்மைகள் மாறுபடும் போது உலகம் என்பது எது? என்ற கேள்வி எழுகிறது.

பெண் - கற்பு:
புதுமைப்பித்தன் மற்றும் இன்னபிற இருபதாம் நூற்றாண்டு எழுத்தாளர்கள் பலரையும் அகலிகைத் தொன்மம் கவர்ந்திருக்கிறது. இதற்குக் காரணம் ஆங்கிலக் கல்வியால் நம்மவர்கள் பெற்ற பெண்ணுரிமை குறித்த விழிப்புணர்வே. 19 ஆம் நூற்றாண்டில் கால்கொண்ட பெண்ணுரிமை விழிப்புணர்வு இருபதாம் நூற்றாண்டுப் படைப்பாளிகளால் அவரவர் சார்புகளுக்கேற்பே வளர்த்தெடுக்கப்பட்டது. இதிகாச, புராணத் தொன்மங்களால் கட்டமைக்கப்பட்ட பெண்-கற்பு பற்றிய மதிப்பீடுகள் அந்தத் தொன்மங்களின் துணையோடே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டன. பெண்கற்பை- பெண்ணடிமையை வலியுறுத்துவதில் தொன்மங்கள் மிகுந்த பங்காற்றுகின்றன. புராண இதிகாசத் தொன்மங்கள் பெண்- பெண்உடல்- பாலியல் மீறல்கள்- தண்டனைகள் என்ற ஒவ்வொன்றின் வழியாகவும் பெண்களை இறுக்கிக் கொண்டே வந்தன. தொன்மங்களில் இடம் பெற்ற ரிஷி, ரிஷிபத்தினி பற்றிய கதைகளில் இந்த வளர்நிலைகளைக் காணலாம்.

1. தாருகாவனத்து ரிஷிகள் அவர்கள் பத்தினிகள் பற்றிய கந்தபுராணக் கதைக் குறிப்புகளில், சிவபெருமான் பிச்சாடண கோலத்தில் பிறந்த மேனியாய் தாருகாவனத்தில் பிச்சையெடுக்க வந்தபோது ரிஷிபத்தினிகள் அவர் அழகில் மயங்கிப் பின்னாலேயே போய்விடுகிறார்கள். கோபம் கொண்ட ரிஷிகள் அபிசார ஓமம் செய்து சிவனை அழிக்க முயன்றார்களே அல்லாமல் தங்கள் மனைவியர்களைத் தண்டிக்கவில்லை. கற்புக் கோட்பாடு இறுக்கம் பெறாத காலத்துத் தொன்மம் இது. வலிமையால் பெண்ணைத் தேர்ந்தெடுத்த காலம்.

2. அகலிகைக் கதையில், வந்திருப்பவன் இந்திரன் என்று தெரிந்தே அவனோடு கூடிய அகலிகையையும் இந்திரனையும் கொளமன் சபித்தான். கற்பு பெண்களுக்கு வலியுறுத்தப்பட்ட காலத்துத் தொன்மம் இது.

3. ரேணுகாதேவி- ஜமதக்கினி ரிஷி கதையில் உடலால் தவறிழைக்கவில்லை யென்றாலும் மனதால் தவறிழைத்தாள் என்று கூறி மகனைக் கொண்டு தலையைத் துண்டித்தார்கள். கற்புக் கோட்பாடு இறுக்கம் பெற்ற காலத்துத் தொன்மம் இது.

4. கார்த்திகைப் பெண்டிர் - சப்த ரிஷி மாதர்கள் பற்றிய தொன்மங்கள் வடவர் தொன்மங்களிலேயும் தமிழ்த் தொன்மங்களிலேயும் கற்பு பற்றிய மதிப்பீடுகளின் பல்வேறு நிலைகளைச் சுட்டுகின்றன. இந்திரன், சிவனின் கருவை ஏழு துண்டங்களாகச் சிதைத்து கார்த்திகைப் பெண்டிர்களின் கணவன்மார்களாகிய ரிஷிகளிடம் தர, அவர்கள் அத்துண்டங்களைத் தீயிலிட்டுத் தூய்மை செய்து தம் மனைவியர்களுக்குத் தருகின்றார்கள். அருந்ததி தவிர்த்த ஆறு ரிஷி பத்தினிகளும் சிவனின் அக்கருவை உண்டு ஆறு குழந்தைகளைப் பெற்றெடுக்கின்றார்கள். பரிபாடல் ஐந்தாம் பாடலில் இச்செய்தி இடம்பெற்றுள்ளது. தத்தம் கணவன்மார்களே சிவனின் கருவைத் தீயிலிட்டு தூய்மைப் படுத்தித் தருவதால் ரிஷி பத்தினிகளாகிய கார்த்திகைப் பெண்டிர்களின் கற்புக்கு ஏதும் பங்கம் வரவில்லை என்று இத்தொன்மம் அமைதி காண்கிறது.

இப்படித் தொன்மங்களின் வழியாக இறுக்கம் பெற்ற பெண்- கற்பு பற்றிய கருத்தாக்கங்களுக்கு எதிரான பெண்ணுரிமை, ஆண் பெண் சமத்துவம் குறித்த புதிய கருத்தாக்கங்களைச் சமுதாயத்தில் பதிக்க இந்தத் தொன்மங்களையே கையாளுவதென்பது படைப்புத் தளத்தில் ஒரு வெற்றிகரமான உத்தி. தொன்மங்களின் நெகிழ்வுத் தன்மை இதற்குப் பெரிதும் துணைநிற்கின்றது. நெகிழ்வுத் தன்மை என்பது இங்கே மாற்றங்களை ஏற்றுக்கொள்வது என்று பொருள்படும். மாற்றங்களும் மாற்றங்களால் விளைந்த மாற்று வடிவங்களுமே தொன்மங்களை நிலைப்படுத்துகின்றன. புதிய சூழலில் அல்லது கால மாற்றத்தில் ஒரு தொன்மம் நெகிழ்வடையும் போழுது மாற்றங்கள் அத்தொன்மத்தை அழிவிலிருந்து காக்கின்றன அல்லது வாழ்விக்கின்றன என்று கருதுதல் வேண்டும்.அகலிகைக் கதையின் மாற்றுவடிவங்கள் அத்தொன்மத்தின் நெகிழ்வுத் தன்மைக்குத் தக்க சான்றுகளாகும். வான்மீகி சொன்ன அகலிகைக் கதை, வியாச பாரதத்தில் பின்வருமாறு இடம்பெறுகிறது, கௌதமன் அகலிகையின் தலையைத் துண்டிக்க உத்திரவிடுகிறான் பின்னர் மனம் மாறி அகலிகையை ஏற்றுக் கொள்கிறான். பரிபாடலில் அகலிகையைக் கல்லாகுமாறு சபித்தான் என்று வேறு ஒரு வடிவம் இடம்பெறுகிறது. ஏறக்குறைய சம காலங்களிலேயே இத்துணை நெகிழ்ச்சியுற்றிருந்த அகலிகைத் தொன்மம், இருபதாம் நூற்றாண்டில் பத்துக்கும் மேற்பட்ட மாற்று வடிவங்களை ஏற்பது அதன் உயிர் வாழும் ஆற்றலையே காட்டுகிறது. புதுமைப் பித்தனும் தொன்மங்களின் மரபை நன்றாக ஓர்ந்தே தம்முடைய அகலிகை, சாப விமோசனம் ஆகிய கதைகளை உருவாக்கியுள்ளார்.

துணை நின்ற நூல்கள்:
1. தி. முருகரத்தினம், புதுமைப்பித்தன் சிறுகதைக்கலை, 1976
2. க.கைலாசபதி, அடியும் முடியும், 1996
3. சரசுவதி வேணுகோபால், தொன்மக் கதைகள் கோட்பாட்டு ஆய்வுகள், 1997
4. ராஜ் கௌதமன், புதுமைப்பித்தன் எனும் பிரம்மராட்சஸ், 2000
5. இரா. வேங்கடாசலபதி (பதி.ஆ.), புதுமைப்பித்தன் கதைகள், 2001
6. பேரா. க. பஞ்சாங்கம், தொன்மத் திறனாய்வு, 2005

1 comments:

said...

தங்களின் வலைப்பதிவைக் கண்டேன் .மகிழ்ச்சி....தமிழாய்வு தொடர வாழ்த்துக்கள்