வேதநாயகரும் அவரின் சில தனிப்பாடல்களும்

வேதநாயகரும் அவரின் சில தனிப்பாடல்களும்

பேராசிரியர் முனைவர் நா.இளங்கோ,
இணைப் பேராசிரியர்,
பட்ட மேற்படிப்பு மையம்,
புதுச்சேரி - 8.

இன்றைக்குச் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட கீழ்க்கண்ட பாடலைக் கவனியுங்கள்,

கேளும் பூமான்களே – கிருபை வைத்து
ஆளும் சீமான்களே
நாளும் கதியில்லா எங்கள் மேல் வர்மமோ
தாளுறும் தூசி போல் தள்ளுதல் தர்மமோ

காலைக்கும் மாலைக்கும் மூளைக்குள் எங்களை
ஆலைக்கரும்பு போல் தேய்த்தீர் - பாக
சாலைக்கும் மன்மத லீலைக்கும் ஏவின
வேலைக்கும் எங்களை மாய்த்தீர்

மூலக்கல்வி நாங்கள் வாசித்தால் ஆபத்தோ
மூடப்பெண் கொள்வீர் உமக்குப் பெரும்பித்தோ
கலைக்கிரந்தங்கள் உங்கள் பாட்டன் சொத்தோ
உமக்கென்ன காணும் தலைமேல் தலை பத்தோ

உங்கட்கு உதவியாய் எங்களைத் தேவன்
உண்டாக்கியதை அறியீரோ - செல்வ
மங்கை உடன் கல்வி நங்கை
முதலானோர்மாதர் என்று குறியீரோ

எங்களை அல்லாமல் நீங்கள் உதித்தீரோ
ஏறி ஆகாயத் திருந்து குதித்தீரோ
அங்கப்பால் உண்ணாமல் தேகம் உதித்தீரோ
அடிமை என்றெங்கள் தலையில் விதித்தீரோ

போதக யூரோப்பு மாதர்களைக் கண்டு
பொங்கிப் பொறாமை கொண்டோமே - என்றும்
பேதம் இல்லா இந்தியாதனில் நாங்கள்
பிறந்தென்ன லாபம் கண்டோமே
நாதக்கல்விக்கு நகை எந்த மூலையே
நாங்கள் விரும்போம் நவரத்ன மாலையே
வேதநாயகன் செய் பெண்மதிமாலையே
வேண்டினோம் தாரும் விடோம் உங்கள் காலையே.
(சர்வ சமய சமரசக் கீர்த்தனைகள் ப-ள்: 184-186)

தங்களுக்குப் படிப்பிக்கும்படி ஸ்திரிகள் புருஷர்களுக்கு வேண்டுதல் என்ற தலைப்பில் எழுதப்பட்ட இந்தப் பாடலில் பெண் கேட்கிறாள், நாள் முழுவதும் ஆலையிட்ட கரும்பு போல் எங்களைக் கசக்கிக் பிழிகின்றிர்களே! அடுப்பங்கரையிலும் படுக்கையறையிலும் ஏவிய வேலைகளுக்குமாக எங்களைச் சாகடிக்கின்றீர்களே! நாங்கள் கல்வி கற்றால் அதனால் ஏதும் ஆபத்தா? படிக்காத முடப்பெண்தான் வேண்டும் என்று கேட்கிறீர்களே உங்களுக்கென்ன பைத்தியமா? படிப்பு என்பது உங்கள் பாட்டன் வீட்டுச் சொத்தா? ஆண்களாகிய உங்களுக்கெல்லாம் தலைக்கு மேல் தலையாகப் பத்துத் தலையா இருக்கிறது? பாடலின் முதல்பத்தி இது. இன்னும் முழுப்பாடலிலும் கேள்விக் கணைகளைத் தொடுக்கும் இப்பெண்ணின் கலகக் குரலைக் கேட்டால்… இருபத்தொன்றாம் நூற்றாண்டுப் புரட்சிப் பெண்ணின் குரலை விட மிக அழுத்தமாகவும் அறிவு ப+ர்வமாகவும் ஒலிக்கும். யார் இந்தப் புரட்சிப்பெண்? பாரதியின் புதுமைப் பெண்ணை விட ஓங்கி ஒலிக்கும் குரலுக்குரியவள். ஆண்களெல்லாம் என்ன ஆகாயத்திலிருந்தா குதித்தீர்கள்? என்று கேட்கும் அந்தப் பெண் மாய+ரம் வேதநாயகர் படைத்த புரட்சிப்பெண். 150 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர்களால் கல்வி அறிமுகப் படுத்தப்பட்ட அந்தக் காலத்திலேயே எங்களுக்கும் கல்வி கொடு! பெண்ணை விட ஆண் என்ன உசத்தி! என்றெல்லாம் குரல்கொடுத்த வேதநாயகரின் குரல்.

மாயூரம் வேதநாயகம் பிள்ளை:
மாயூரம் வேதநாயகர். சவரிமுத்துப் பிள்ளைக்கும் ஆரோக்கிய மரி அம்மாளுக்கும் மகனாகத் திருச்சிக்கு அருகிலுள்ள குளத்தூரில் 1826 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11 ஆம் நாள் பிறந்தார். வேதநாயகரின் பாட்டனார் மதுரநாயகம் பிள்ளை சைவ வேளாள மரபில் பிறந்தவர் என்றாலும் கத்தோலிக்கக் கிறித்தவ சமயத்தைத் தழுவியதால் அவர் வழிவந்த வேதநாயகர் பிறப்பால் கிறித்துவராகப் பிறந்தார். ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் மிகுந்த புலமை பெற்ற வேதநாயகருக்கு ஆங்கிலக் கல்வியைப் பல்கலைக் கழகங்களின் வாயிலாகப் பெறும் வாய்ப்பு கிடைக்கவில்லை. (சென்னைப் பல்கலைக் கழகம் தொடங்கப்பட்டது-1857). இவர் ஆங்கிலக் கல்வியைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் பெரும் புலமை பெற்றிருந்த தியாகப் பிள்ளை (திருச்சி நீதிமன்றத்தில் மொழி பெயர்ப்பாளராகப் பணியாற்றியவர்) என்பவரிடம் பயின்றார். தொடக்கத்தில் தம் 22 ஆம் வயதில் திருச்சி நீதிமன்ற ஆவணக் காப்பாளராகவும் பின்னர் 24ஆம் வயதில் திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றினார். 1856இல் ஆங்கில அரசு நடத்திய உரிமையியல் நீதிமன்ற நீதிபதிகளுக்கான எழுத்துத் தேர்வை எழுதி வெற்றி பெற்றார் வேதநாயகர். 1857இல் அவருக்கு உரிமையியல் நீதிமன்ற நீதிபதி பதவி கிடைத்தது. தம் முப்பத்தொன்றாம் வயதில் அவர் இப்பதவியினை ஏற்றார். ஆங்கில அரசால் நீதிபதி பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் தமிழர், முதல் இந்தியர் என்ற பெருமைகளுக்கு உரியவரானார் வேதநாயகர் (இந்தியாவின் முதல் சுதந்திரப் போராம் சிப்பாய்க் கலகம் நடைபெற்ற ஆண்டு). நீதிபதி பதவியில் நேர்மையோடும் தன்மானத்தோடும் பணியாற்றிய வேதநாயகருக்கு இடையில் பல இடையூறுகள் வந்தன. பதினைந்து ஆண்டுகள் மட்டுமே நீதிபதியாகப் பணியாற்றிய அவருக்கு 46 ஆம் வயதில் மேலதிகாரிக்குக் கீழ்படிந்து நடக்கவில்லை என்ற காரணத்தால் கட்டாயத்தின் பேரில் விருப்ப ஓய்வு வழங்கப்பட்டது.வேதநாயகரின் குடும்ப வாழ்க்கை மிகுந்த சோகம் கலந்தது. இல்வாழ்க்கையில் அவர் மணந்துகொண்ட பெண்கள் அடுத்தடுத்துக் காலமாயினர். எனவே அவர் ஐந்து பெண்களை மணக்க நேரிட்டது. முதல் மனைவி பாப்பம்மாள். இரண்டாம் மனைவி இலாசர் அம்மையார். மூன்றாவது மனைவி அக்காள் மகள் மாணிக்கத்தம்மையார். இவருக்கு மூன்று குழந்தைகள் பிறந்தனர். முதல் குழந்தை ஆண்குழந்தை ஞானப்பிரகாசம், இரண்டாம் மூன்றாம் குழந்தைகள் பெண் குழந்தைகள் சவரி முத்தம்மாள், இராசாத்தி அம்மாள். நான்காவது மனைவி அண்ணுக் கண்ணம்மாள். ஐந்தாம் மனைவி அம்மாளம்மாள். வாழ்க்கையில் எத்தனை சோகங்கள் வந்தாலும் கலங்காத நெஞ்சுரம் பெற்றவர் வேதநாயகர். எனவேதான் இத்துணை துன்பங்கள் தொடர்ந்த போதும் அவரால் சாதிக்க முடிந்தது.

வேதநாயகர் படைப்புகள்:
கவிதைப் படைப்புகள்
1. நீதி நூல் நீதி இலக்கியம் 1859
2. பெண்மதி மாலை பெண்கல்வி பற்றியது 1869
3. சோபனப் பாடல்கள் நலுங்குப் பாடல்கள் 1862
4. தனிப்பாடல்கள் உதிரிப் பாடல்கள் 1908
5. திருவருள் மாலை சமயப் பாடல்கள் 1873
6. திருவருள் அந்தாதி சமயப் பாடல்கள் 1873
7. தேவமாதா அந்தாதி சமயப் பாடல்கள் 1873
8. தேவதோத்திர மாலை சமயப் பாடல்கள் 1889
9. பெரிய நாயகி அம்மைப் பதிகம் சமயப் பாடல்கள் 1873
10. சர்வ சமய சமரசக் கீர்த்தனை தமிழிசைப் பாடல்கள் 1878
11. சத்திய வேதக் கீர்த்தனை தமிழிசைப் பாடல்கள் 1889
மொழிபெயர்ப்பு
12. சித்தாந்த சங்கிரகம் தமிழில் சட்ட ஆவணங்கள் 1862
13. 1850 – 1861 நீதிமன்றத் தீர்ப்புகள் தமிழில் சட்ட ஆவணங்கள் 1863
உரைநடை நூல்கள்
14. பெண்கல்வி கட்டுரை 1869
15. பெண்மானம் கட்டுரை 1870
16. பிரதாப முதலியார் சரித்திரம் நாவல் 1879
17. சுகுண சுந்தரி நாவல் 1887

1858 முதல் 1887 வரை தொடர்ந்து தமிழிலக்கியங்கள் படைப்பதில் ஈடுபட்ட வேதநாயகர் தமிழின் முதல்நாவலாம் பிரதாப முதலியார் சரித்திரத்தை (1879) எழுதித் தமிழிலக்கிய உலகில் தனியிடத்தைப் பெற்றுள்ளார்.

மாயூரம் வேதநாயகரின் தனிச்சிறப்புகள்:
தென்னாற்காடு மாவட்டத்தில் இராமலிங்கர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம், ஞானசபை, தருமச்சாலை போன்ற அமைப்புகளை ஏற்படுத்திப் பரபரப்பான முறையில் இயங்கிக் கொண்டிருந்த அதே காலகட்டத்தில் தஞ்சை மாவட்டத்தில் அமைதியான முறையில் தமது எழுத்துக்களின் மூலம் சமூகச் சீர்திருத்தப் பிரச்சாரம் செய்து வந்தவர் மாய+ரம் வேதநாயகம். சமூகத் தொண்டோ இலக்கியப் பணியோ அவருடைய முழு நேரப்பணி அல்ல, அவராக விரும்பி ஏற்றுக்கொண்ட பணி. அதிகார பலமுள்ள அராசாங்கப் பதவியிலேயே அவர் சொகுசாக வாழ்க்கையை நடத்திச் சென்றிருக்கலாம். மாறாகத் தம் பதவி அனுபவங்களையும் அவர் தமிழ் வளர்ச்சிக்கே பயன்படுத்தினார். நீதிமன்றத் தீர்ப்புகளைத் தமிழில் வெளியிட்டுச் சட்டத்தமிழின் தோற்றத்திற்குப் பாடுபட்டார்.கிருத்துவ மத போதகர்கள் தீவிரமான மதப்பிரச்சார, மதமாற்ற இயக்கத்தை நடத்திக் கொண்டிருந்த அன்றைய காலகட்டத்தில், முழுமையான கிருத்துவ மதப்பற்றுள்ள வேதநாயகர் சர்வ சமய சமரசக் கீர்த்தனைகள் பாடியிருப்பதும் போலிச் சமயவாதிகளை அடையாளம் காட்டும் நையாண்டிப் பாடல்களைப் பாடியிருப்பதும் குறிப்பிடத்தக்கன. வள்ளலாரைப் போலவே சர்வ சமய சமரசம் காண வேதநாயகர் முயன்றார் என்றாலும், வள்ளலாரின் வருணாஸ்ரம எதிர்ப்பில் இவரின் கவனம் செல்லவில்லை. மாறாகப் பெண் விடுதலை, பெண்கல்வி போன்றவற்றில் அதிக நாட்டம் செலுத்தினார். இந்திய, தமிழகப் பெண்களின் பரிதாப நிலை குறித்து முதன் முதலில் பாடிய தமிழ்க் கவிஞர் வேதநாயகரே.(வேதநாயகருக்கு முன்பே புதுவைக் கவிஞர் சவரிராயலு நாயக்கர் பெண்கல்வி குறித்துப் பாடியுள்ளார் என்ற தகவலும் உண்டு, இக்கருத்து ஆய்வுக்குரியது)

மாயூரம் வேதநாயகரின் தனிப்பாடல்கள்:
வேதநாயகர் தம் வாழ்நாளின் பல்வேறு சூழல்களில் எழுதிய தனிப்பாடல்கள் அவரது மறைவுக்குப் பின்னர் தொகுக்கப்பட்டு 1908 ஆண்டு வெளிவந்ததாக அறிகிறோம். பின்னாளில் சைவசிந்தாந்த நூற்பதிப்புக் கழகம் பல புலவர்களின் தனிப்பாடல்களைத் திரட்டித் தனிப்பாடல் திரட்டு என்ற பெயரில் வெளிட்டபோது இரண்டாம் தொகுப்பில் மாயூரம் வேதநாயகரின் 61 தனிப்பாடல்கள் பதிப்பிக்கப் பட்டுள்ளன.( தனிப்பாடல் திரட்டு, தொகுதி-2, ப-ள் 146 - 168) அறுபத்தொரு பாடல்களும் கீழ்க்கண்ட சூழல்களில் பின்வரும் பொருளமையப் பாடப்பட்டுள்ளன.

மொத்த பாடல்கள் : 61
உத்தியோகம் குறித்தும் ஓய்வுக்காலம் குறித்தும் பாடிய பாடல்கள்: -9,
திருவாவடுதுறைச் சுப்பிரமணிய தேசிகர் மீது பாடிய பாடல்கள்: -13, பரத்ததையர் குறித்து: -1,
ஜவுளி வியாபாரி குறித்து: -1,
துறவிகளின் நீண்ட சடையைக் கேலிசெய்து: -1,
இறைச்சியுண்ணும் அந்தணர்களைப் பழித்து: -4,
புலவர்களின் புகழ்ச்சியைக் கண்டித்து: -5,
மழை வேண்டிப் பாடிய பாடல்கள்: -7,
வெப்ப மிகுதியால் சூரியனை நிந்தித்துப் பாடிய பாடல்: -2,
காரைக்கால் தனக்கோடி முதலியாருக்கு எழுதிய கடிதம்: -1,
மீனாட்சி சுந்தரம்பிள்ளை பாடிய சீகாழிக்கோவையைச் சிறப்பித்து: -2, சி.வை.தாமோதிரம் பிள்ளையவர்கள் மீது பாடிய பாடல்கள்: -2,
மனைவி இறந்த போது பாடிய பாடல்கள்: -5,
வரிவாங்கும் அதிகாரிகள் குறித்து: -2,
நாவிதரைப் புகழ்ந்து பாடியது: -1,
முதலியார் வாங்கி வந்த காளை குறித்து: -1,
வேடிக்கைப் பாடல்: -4.

வேதநாயகரின் தனிப்பாடல்களில் அவரின் சோகம் கோபம், நையாண்டி, நகைச்சுவை, நன்றியுணர்வு போன்ற பல்வேறு உணர்வுகள் வெளிப்பட்டிருப்பதைக் காணமுடியும்.வேதநாயகர் காலத்தில் தமிழகத்தில் பல அறிஞர்களும் புலவர் பெருமக்களும் வாழ்ந்து வந்தனர். அத்தகு அறிஞர்களோடும் புலவர்களோடும் வேதநாயகருக்கு நல்ல நட்பு இருந்தது. குறிப்பாக, மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையுடனும் திருவாவடுதுறை ஆதீனத் தலைவர் சுப்பிரமணிய தேசிகரிடமும் வேதநாயகர் நெருங்கிய நட்புகொண்டிருந்தார். இவர்கள் மட்டுமின்றி இராமலிங்க சுவாமிகள், ஆறுமுக நாவலர், கோபால கிருஷ்ண பாரதியார், சி.வை.தாமோதிரம் பிள்ளை போன்ற பலருடனும் இவர் தொடர்பு கொண்டிருந்தார். மகாவித்வான் மீனாட்சி சுந்தம் வேதநாயகர் மீது குளத்தூர் கோவை என்றவொரு கோவை நூலைப் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தகுந்த செய்தியாகும்.

வேதநாயகரின் சமுதாயப்பணி:
வேதநாயகர் நீதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்று மயிலாடுதுறையில் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் தமிழகத்தில் கொடிய பஞ்சம் ஒன்று தலைவிரித்து ஆடியது. இதனைத் தாது வருஷப்பஞ்சம் என்று குறிப்பிடுவார்கள். 1876 - 78 ஆண்டுகளில் ஏற்பட்ட இப்பஞ்சத்தின் போது மக்கள் உண்ண உணவின்றிப் பட்டினியால் செத்து மடிந்தனர். இந்தப் பஞ்ச காலத்தில் வேதநாயகர் ஆற்றிய பணிகள் மகத்தானவை. தாமே தம் சொந்தச் செலவில் கஞ்சித் தொட்டிகள் திறந்து பசித்து வந்தவர்க்கெல்லாம் உணவளித்தார். பஞ்சத்தைத் தீர்க்க உதவுமாறு செல்வர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். பஞ்சம் தீர இறைவனை வேண்டிப் பாடல்கள் பாடி பிரார்த்தனை செய்தார்.சான்றாக,
எட்டுநாள் பத்துநாள் பட்டினி யோடே
இடையில் கந்தை இருகையில் ஏடே
ஒட்டி உலர்ந்த உடல் என்புக் கூடே
ஒரு கோடி பேர்கள் வசிப்பது காடே
ஊரும் இல்லாமல் - குடிக்கத்
தண்ணீரும் இல்லாமல் - அன்னமெனும்
பேரும் இல்லாமல் - பசி தீர்க்கஆரும் இல்லாமல்
ஊரில் அநேகர் உயிர் மாண்டு போனாரே
பஞ்சம் தீர் ஐயா! – உனையன்றித்தஞ்சம் ஆர் ஐயா

என்று மழையில்லாமல் பஞ்சத்தால் வாடும் மக்களின் துயர் தீர நெஞ்சுருக இறைவனிடம் வேண்டும் வேதநாயகரின் உயிர்இரக்க உணர்வை என் என்பது?

பஞ்சம் தீர்த்த சுப்பிரமணிய தேசிகர்:
படிபடியாகப் பொன்கொட்டி நெற்கொள்ளும் இப்பஞ்சத்திலே
பிடிபிடியாக மணியும் கனகமும் பெட்புறுவோர்
மடிமடியாகக் கட்டிச் செல்லத்தந்தான் பெரும்வள்ளலென்றே
குடிகுடியாகத் தொழும் சுப்ரமண்ய குணாகரனே

படிப்படியாக தங்கத்தைக் கொட்டிக் கொடுத்து அதற்கு ஈடாக நெல்லைப் பெற்றுச் செல்லும் பஞ்சக் காலத்தில் வாரி வழங்கிய சுப்பிரமணிய தேசிகரை நன்றியோடு பாராட்டிப் பாடுகின்றார் வேதநாயகர். மக்கள் என்னும் யானையைப் பஞ்சம் என்னும் முதலை பிடித்து அலைக்கழிக்கின்றது. எனவே விஷ்ணு சக்கராயுதத்தை ஏவியதைப் போல சுப்பிரமணிய தேசிகர் வட்டம் என்று வழங்கப்படும் வட்டமான காசினைக் கொண்டு பஞ்சத்தின் தலையைத் துண்டித்து மக்களைக் காத்தார் என்ற பொருளமைந்த இவரின் தனிப்பாடல் இதோ, கரியொத்தன பல்லுயிர்களைப் பஞ்சக் கராம்அடிக்க அரியொத்தனன் சுப்பிரமணி ஐயன் அரிச்சக்கரம் சரியொத்தன அவன் ஈந்திடும் பொன்வெளிச் சக்கரமே. (தனி- 19)
1870 வாக்கில் தமிழகத்தில் எங்கே பார்த்தாலும் விஷபேதியின் கொடுமை பரவியிருந்தது. அரசாங்கம் அந்நோய் பரவாதபடி மருந்து மாத்திரைகளைக் கொடுத்தது. வேதநாயகரும் தம்மாலான உதவிகளைச் செய்தார். அன்றியும் பேதிக்குரிய மருந்தை வாங்கிக் கிராமந்தோறும் கொடுத்து நோயிலிருந்து மக்களைக் காக்க வேண்டுமென்று வேதநாயகர் சுப்பிரமணிய தேசிகருக்குக் கவிமடல் எழுதி வேண்டிக் கொள்கிறார். இலக்கண மெய்க்கு அரை மாத்திரை யாம் இவ்வளவும் இன்றிமலக்கண் விளைபிணியாற் பலர் மாய்ந்தனர் மண்டும் இந்நோய்விலக்க அருள்புரி… சுப்பிரமணி யானந்த நின்மலனே
ஆதீனத்தோடு தமக்கிருந்த நட்பை மக்கள் சேவைக்குப் பயன்படுத்தும் வேதநாயகரின் மக்கள் தொண்டு மகத்தானது. தமிழ்இலக்கணத்தில் மெய்எழுத்துக்குக் கூட அரை மாத்திரை இருக்கிறது, மனித மெய்க்கு அந்த அரை மாத்திரை கூட இல்லாத அவலநிலையை நயமாக எடுத்துக் கூறும் கவிதை அவரின் மனிதநேயத்துக்குச் சான்று.

மழையோ வெய்யிலோ மக்கள் துன்புறக் கூடாது:
வேதநாயகர் மழை பெய்யாமல் மக்கள் துன்புற்ற போது மழைவேண்டிப் பாடினார், கடும் வெய்யிலால் மக்கள் துன்புற்ற போது கதிரவனைக் கண்டித்துப் பாடினார். மொத்தத்தில் மக்கள் நொந்தால் மாயூரரின் மனம் நோகும், கவிதை பிறக்கும். ஒரு கோடைக்காலம். கோடையின் வெப்பத்தில் மக்கள் துடித்தனர், வேதநாயகருக்குச் சூரியன் மேல் கடுங்கோபம். கதிரவனே உன்பாகன் முடமா? உன் குதிரைகள் முடமா? உன்னுடைய ஆகாய வழி தூர்ந்துவிட்டதா? ஏன் இப்படி எரிகிறாய்? உனக்கு யார் இங்கே விருந்துவைத்து அழைத்தார்கள்? கோபமும் கிண்டலுமாக கவி படைக்கிறார், பாடல் இதோ,

பகலே பாகன்போல் பரிகள் முடமோ
அகல்வான் வழிதூர்ந் ததுவோ - அகலா
திருந்தாய் திரிந்தாய் எரிந்தாய் விரிந்தாய்
விருந்தார் புரிந்தார்கள் மேல்.

தொடர்ந்து மழை இல்லாமையால் கடும் பஞ்சம். மழை பெய்யாதா? என்று மக்கள் எல்லாம் ஏங்கிக் கிடக்கிறார்கள். உதவி செய்கிறேன் என்று சொல்லிச் செய்யாத கருமிகளைப் போல மழை பெய்வதுபோல் போக்குக் காட்டிப் பெய்யாமல் பொய்த்து விடுகிறது.(தனி.35) உண்ணீர் இலாமையினால் உள்நீரும் வற்றியழக் கண்ணீரும் வற்றியது (தனி. 37) என்றெல்லாம் பாடும் வேதநாயகர், மேகத்திற்குத் தக்கதொரு ஆலோசனை கூறுகின்றார். வாரியுண்டு வாரிமொண்டு வாரியுண்டு வானிருண்டுபேரிகொண்டு நீதிரண்டு பெய் (தனி. 34)
(வாரி - கடல்), நீர் நிறைந்த கடல் எதிரே இருக்கிறது அதிலுள்ள நீரை வாரி முகந்து அள்ளிக் குடித்து வானில் கருமேகமாகச் சூழ்ந்து இடிமுழக்கம் செய்து மழையே நீ பெய்வாயாக என்கிறார். வாரியுண்டு வாரிமொண்டு வாரியுண்டு வானிருண்டு சோகத்திலும் சொல்நயமிக்க கவிதைகள் பிறப்பது வேதநாயகரின் கவித்திறனுக்குச் சான்று.

மாமிசமுண்ணும் பார்ப்பனர்களைப் பழித்தார்:
வேதநாயகர் காலம், ஆங்கிலக் கல்வியும் அதன்வழி ஐரோப்பிய நாகரீகமும் தமிழ் மக்களின் வாழக்கை முறைகளில் பெரிய அளவில் தாக்கத்தை உண்டாக்கிய காலம். ஐரோப்பிய மோகத்தால் நிலை தடுமாறிய பிராமண இளைஞர்கள் பலர் மாமிசம் உண்ணுதல், மது குடித்தல் போன்ற பழக்கங்களுக்கு ஆளாகி அதுவே நாகரீகம் என மயங்கிய காலம். இந்தச் சூழலில் நீதிநூல் பாடிய வேதநாயகரால் சும்மாயிருக்க முடியுமா? நகைச்சுவையாகப் பாடுவதுபோல் தம் கடும் கண்டனத்தைப் பதிவு செய்கிறார்.

ஆரணவாயினர் மாடாடுகளை அடித்து அவித்துப்
பாராணஞ் செய்ய பழகிக் கொண்டார் மதுபானத்திலும்
பூரணராயினர் இன்னவர்க் கிந்தத் துர்புத்தித் தந்த
காரணங் கண்டயற்கோர் சிரங்கொய்தனன் கண்ணுதலே.

வேதம் ஓதுகிற வாயால் மாமிசம் உண்பதும் மது குடிப்பதுமாக வாழும் பிராமணர்களுக்கு இந்த துர்புத்தி தந்த பிரம்மனை தண்டிக்கவே சிவன் அவர் தலையில் ஒன்றைக் கொய்து விட்டானாம். இது பரவாயில்லை, இந்தப் பாடலைப் பாருங்கள்.

ஊன் தூக்கி யுண்ணும் பிராமணர்க்கஞ்சி உமாபதியும்
மான் தூக்கினான் கையில் வேலவன் தூக்கினான் வாரணத்தை
மீன்தூக்கினான் கொடியாக உருவிலி மேடமது
தான்தூக்கவே அதிலேறிக் கொண்டான் அந்த சண்முகனே.

சிவன் ஏன் மானைக் கையில் வைத்துக்கொண்டான் தெரியுமா? முருகன் கோழியை ஏன் தன் கொடியில் பத்திரப் படுத்திக்கொண்டான் தெரியுமா? மன்மதன் ஏன் மீனைத் தன் கொடியில் வைத்துக்கொண்டான் தெரியுமா? முருகன் ஏன் ஆட்டைத் தன் வாகனமாக்கிக் கொண்டான் தெரியுமா? எல்லாம் மாமிசம் உண்ணும் பிராமணர்களிடமிருந்து இவற்றைக் காப்பாற்றத்தான். பாடலில் நகைச்சுவையும் நையாண்டியும் இருந்தாலும் வேதநாயகரின் கண்டிப்பும் அறிவுரையுமே மேலோங்கி இருப்பதை உணர்ந்தால் அவரின் சமூகப்பற்று நமக்கு விளங்கும்.

நகைச்சுவை உணர்வாளர் வேதநாயகர்:
வேதநாயகரின் குடும்ப வாழ்க்கையும் அரசுப் பணியும் நெருக்கடி மிக்கதாய் இருந்தபோதும் இயல்பாகவே அவர் நகைச்சுவை உணர்வு மிக்கவர் என்பதற்கு அவரின் இரண்டு நாவல்களுமே சான்று. மிகச் சிறந்த நகைச்சுவைப் படைப்பாக அவர் பிரதாப முதலியார் சரித்திரத்தைப் படைத்திருந்தார். தனிப்பாடல்களிலும் அவரின் நகைச்சுவை உணர்வு இயல்பாக வெளிப்பட்டிருப்பதைக் காணமுடியும். தன் வீட்டிலிருந்த வண்டி மாடு ஒன்றை அவர் வருணிக்கும் பாடல் நல்ல நகைச்சுவைப் பாடலுக்குச் சான்று,

இட்டமுடன் முதலியார் வாங்கிவந்த காளை தினமிருபோர் தின்னும்
சட்டமுடன் கொள்ளுண்ணும் புல்லுண்ணுமதைப் பண்டிதனில் பூட்டகிட்டவரின் முட்டவரும் தொட்டவர் மேலேகழியும் கீழேவீழும்
எட்டாள்கள் தூக்கிடினும் தடிகொண்டு தாக்கிடினும் எழுந்திராதே.

இது போல் நாவிதரைப் புகழ்ந்து அவர்பாடிய பாடலும் படித்துப் படித்து
இன்புறத் தக்கது.

முடிப்பாகச் சில வரிகள்:
ஓய்வு பெற்று மயிலாடுதுறையில் நிலையாகத் தங்கியபோது 1873-ஆம் ஆண்டில் வேதநாயகர் மயிலாடுதுறை நகராட்சிக்கு நியமனத் தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருடைய நகராட்சிப்பணிகளில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது, பெண்களுக்குக் கல்வி கற்பிக்கப் பள்ளிக்கூடம் ஒன்றை அவர் தொடங்கியதுதான். பெண்கல்வி குறித்துக் கவிதைகள் எழுதுவதோடு நில்லாமல் வாய்ப்பு கிடைத்தபோது அதனைச் செயல்படுத்தியும் காட்டிய பெருமை அவருக்கு உண்டு. மரபுக் கவிதை, மொழிபெயர்ப்பு, உரைநடை, இசைத்தமிழ் என்ற பல்வேறு இலக்கிய வடிவங்களிலும் படைப்புகள் படைத்துப் பெண்கல்வி, பெண்விடுதலை, சமூக முன்னேற்றம், தமிழ்ப்பணி என்று பல தளங்களிலும் அவரின் ஆக்கப்பணிகள் நடைபெற்றுள்ளன. ஆங்கிலக் கல்வியால் முதல் இந்திய நீதிபதியாகப் பணியாற்றிப் பெருமைபெற்ற வேதநாயகருக்கு அவர் காலத்திலேயே ஆங்கில மொழியின் ஆதிக்கம் கவலை அளித்திருக்கிறது. ஆங்கிலம் தலையெடுக்க, ஏன் என்று கேட்பவர் இல்லாமல் தமிழ் என்னாகுமோ? என்று வேதநாயகர் வேதனையடைந்திருக்கின்றார். அதனால்தான், வாவென்று உதவ வரும் சுப்பிரமணிய வரோதயனே தான்என்று வெண்ணரன் பாடையிந் நாட்டில் தலையெடுக்க ஏனென்று கேட்பவ ரில்லாத் தமிழை யினிதளிக்க நானென்று கங்கணங் கட்டிக் கொண்டாய் இந்த நானிலத்தே என்று வெண்ணரன் பாடை- ஆங்கிலம் தலையெடுக்க ஏன்என்று கேட்பாரில்லாத் தமிழ் என்று தமிழ் குறித்துக் கவலைப்பட்ட முதல் தமிழராகத் தன்னைப் பதிவு செய்கிறார் வேதநாயகர்.வேதநாயகரின் ஞானம்:ஒரு படைப்பாளிக்குத் தம் படைப்புகள் குறித்த ஒரு கர்வம் இயல்பாகவே அமைந்திருக்கும். அதிலும் தம் காலத்து மெத்தப் படித்தவர்கள் எல்லாம் தம்மைப் புகழ்ந்து பாடிச் சிறப்பிக்கும் பேறு பெற்ற ஒரு படைப்பாளிக்கு இத்தகைய கர்வம் வருவது இயல்பே. ஆனால் வேதநாயகர் இதிலும் வேறுபட்டு நிற்கிறார். தம் நெஞ்சுக்குக் கூறுவதுபோல், பொதுவாகக் கவிதைகள் குறித்தும் கவிஞர்கள் குறித்தும் அவர் கூறும் நீதிநூல் பாடல் ஒன்று, மிகுந்த கவனத்திற்குரியதாக இருக்கின்றது.அப்பாடல் இதோ,என்னநீ வருந்திக் கவிபாடினும் எடுத்த கற்பனை முன்னோர்சொன்னதே அலால் நூதனம் ஒன்றிலைத் தொன்மை நூல் பலவாகும்முன்னம் நூலெலாம் தந்தவன் நீஅலை முற்றுணர்ந்தனை அல்லைஉன்னின் மிக்கவர் பலர் உளார் கல்வியால் உள்ளமே செருக்கு என்னே! (நீதி நூல்-313) உன்னின் மிக்கவர் பலர் உளார் கல்வியால், உள்ளமே செருக்கு என்னே! என்ற வேதநாயகரின் நீதிநூல் பாடலடி அவர் தம் நெஞ்சுக்குக் கூறியதாகப் பாடப்பட்டிருப்பினும், உலகோர் யாவர்க்குமான அறிவுரையாகவே அதனைக் கொள்ளல் சிறப்பு.

துணை நூற்பட்டியல்:
1. வேதநாயகர், சர்வ சமய சமரசக் கீர்த்தனைகள், 1954
2. வேதநாயகர், நீதி நூல், 1962
3. அ.பாண்டுரங்கன், வேதநாயகம் பிள்ளை, 1994
4. மா.சேசையா, முதல் தமிழ்நாவலாசிரியர் நீதிபதி வேதநாயகர், 1989
5. அருணன், தமிழகத்தில் சமூக சீர்திருத்தம், 1999

6 comments:

said...

அன்புசால் நண்பர் இளங்கோ அவர்களுக்குக் கனிவான கைகுவிப்பு!
இனிய நல் வாழ்த்துகள்!
இணைய தள வலைப் பூக்களில் உலா வந்த நேரத்தில் எதிர்பாராதவிதமாகத் தங்கள் வலைப் பூவைக் காண நேர்ந்தது. கண்டு, படித்த நெஞ்சம் பெரிதும் மகிழ்ந்தது. வேதநாயகர் பற்றிய தங்கள் கட்டுரைக்கு
அடியேனின் உளமார்ந்த பாராட்டுகள். கட்டுரை சிறப்பாக அரிய தகவல்களோடு அமைந்திருந்தது. வாழ்க தங்கள் முயற்சி!
புதச்சேரி சவரிராயலு நாயகரே பெண்கள் முன்னேற்றத்துக்கு முதல் சுழி போட்டவர் என்பதைப் பல ஆய்வுகள் மூலம் கண்டு, அப்போது பெரிய பாப்பாரத் தெருவில் இருந்த பெண்கள் பள்ளியில் தலைமை ஆசிரியையாக இருந்த, நல்லாசிரியர் விருதினை முதன் முதலாகப் புதுச்சேரியில் வழங்கப் பெற்ற அறச்செல்வி கர்மேலா லெபோ (என் தமக்கை) புதுவை அரசிடம் போராடி அப்பள்ளிக்கு சவரிராயலு பெண்கள் பள்ளி என்று பெயர் சூட்ட வைத்தார்கள். வேதநாயகம் பிள்ளை அவர்களுக்கு முன்பே
பெண் கல்வியில் ஈடுபாடு கொண்டு உழைத்தவர் அவரே! இதனைத் தங்கள் கவனத்துக்கொண்டு வர விரும்பினேன்.

வேதநாயகம் பிள்ளை வழிமரபில் வந்தவர்கள் நாங்கள் என என் தமக்கை கூறியதைப் பலமுறை கேட்டிருக்கிறேன். அவரைத் தமிழுலகு மறந்துவிட்ட இந்தக் கால கட்டத்தில் அவரைப் பற்றிக் கட்டுரை எழுதிய தங்களுக்கு எளியேனின் நெஞ்சார்ந்த நன்றிகள்.
அன்புடன்
பெஞ்சமின் லெபோ
சர்சல் (பிரான்சு)
(முன்னாள் தமிழ்த் துணைப் பேராசிரியன்)
தாகூர் கலைக் கல்லூரி)

said...

அன்புக்குரிய பேராசிரியர் பெஞ்சமின் லெபோ அவர்களுக்கு வணக்கம் மற்றும் நன்றிகள் பல. கட்டுரை குறித்த தங்களின் திறனாய்வு என்னை உற்சாகப்படுத்துகிறது. புதுச்சேரி சவரிராயலு நாயகரே பெண்கள் முன்னேற்றத்துக்கு முதல் சுழி போட்டவர் என்ற செய்தியை என்னுடைய கட்டுரையிலேயே குறிப்பிட்டுள்ளேன். வேதநாயகம் பிள்ளை வழிமரபில் வந்த தங்களின் வாழ்த்தும் பாராட்டும் எனக்குக் கிடைத்த பெரிய பரிசு.
தொடர்ந்து தங்களின் விமர்சனங்களை வேண்டுகிறேன்.
அன்பின்
நா.இளங்கோ

said...

ஐயா,
பதிவுக்கு மிக்க நன்றி.
படித்துப் பயனடைந்தேன்.

said...

நன்றி இளங்கோ அவர்களே தமிழ்ச்சமுதாயம் கிட்டத்தட்ட மறந்து தமிழ் கவிஞரைப் பற்றி பகிர்ந்தது. தான் பதவியில் இருந்தபோது தன் வீட்டு வாசலில் இருந்த கூட்டத்தைப்பற்றியும் ஓய்வு பெற்ற அக் கூட்டம் பற்றி அவர் எழுதிய பாடலைத் தரமுடியுமா?

said...

அருமையான பதிவு நல்ல முயற்சி வாழ்க உங்க தொண்டு. இவருடைய முழு பாடல்கள் எங்கு கிடைக்கும் சொல்ல முடியுமா. உங்களுடைய பதிவில் மேலுள்ள பாடலை சமுக வலைதளத்தில் சோ்த்து உள்ளேன உங்களுக்கு நன்றி சொல்லி

said...

ஆங்கில அரசால் நீதிபதி பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் தமிழர், முதல் இந்தியர் என்ற பெருமைகளுக்கு உரியவரானார் வேதநாயகர் என்பது சரியான தகவலா?! நூல்களில் துணிந்து பதிவிடலாமா??!