பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் உலகியல் நூறு ஓர் ஆய்வு

பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் உலகியல் நூறு ஓர் ஆய்வு அறிமுகம்

பேராசிரியர் முனைவர் நா.இளங்கோ,
இணைப் பேராசிரியர்,
பட்ட மேற்படிப்பு மையம்,
புதுச்சேரி - 8.

தமிழிலக்கிய வரலாற்றில் பல்வேறு இயக்கங்களைச் சார்ந்த பாவலர்கள் பலருண்டு. ஆனால் தாமே ஓர் இயக்கமாக வாழ்ந்த பாவலர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் மட்டுமே. மூச்சிருக்கும் வரை தமிழுக்காக உயிர்த்தவர். பேச்சிருக்கும்வரை தமிழர் உரிமைக்காக முழங்கியவர். நினைவிருக்கும் வரை தமிழர் விடுதலை பற்றியே நினைத்தவர். தமிழக வரலாறு காணாத தமிழ்ப்போராளி பாவலரேறு பெருஞ்சித்திரனார்.

ஓய்ந்திடல் இல்லை, என் உள்ளமும் உணர்வும் உயிர்ச்செறிவும்
தேய்ந்திடல் இல்லை, என் விரல்களும் தாளும்! திரிந்தலைந்து
சாய்ந்திடல் இல்லை, என்உடலும், எனவே சலிப்பிலனாய்
மாய்ந்திடல் வரையும் உழைப்பேன், உரைப்பேன், மக்களுக்கே!

என்று முழக்கம் செய்த பாவலரேறு எழுதியவாறே வாழ்ந்தார். அவர் வாழ்வின் இறுதிநாள் வரை தமது எந்தக் கொள்கையையும் விட்டுக் கொடுக்காமல் வாழ்க்கையே போராட்டமாய், போராட்டமே வாழ்க்கையாய் வாழ்ந்து மறைந்தார். பாவலரேறு தனித்தமிழ்நாடு, பெரியாரின் தன்மானக்கொள்கை, மார்க்சியப் பொருளியல்கொள்கை என்ற முப்பெருங் கொள்கைகளைத் தம் உயிர்மூச்சாகக் கொண்டு இறுதிவரை போராடினார். தமிழ்த் தேசியமே அவரின் உயிர்க்கொள்கையாய் இருந்தது. தென்மொழி: பெருஞ்சித்திரனாரின் தமிழ் இயக்கப் பணியில் பெரும்பங்காற்றியது அவரின் தென்மொழி இதழே. தமிழன்பர்களின் போர்வாளாகத் தென்மொழி விளங்கியது. தென்மொழியின் முதல் இதழ் 1-8-1959இல் வெளியானது. இதழின் குறிக்கோள்முழக்கமாகப் பின்வரும் பாடல் ஒவ்வொரு இதழிலும் இடம்பெறுவது வழக்கம்.

கெஞ்சுவதில்லை பிறர்பால்! அவர்செய் கேட்டினுக்கும்
அஞ்சுவதில்லை! மொழியையும் நாட்டையும் ஆளாமல்
துஞ்சுவதில்லை! எனவே தமிழர் தோளெழுந்தால்
எஞ்சுவதில்லை! புவியில் எவரும் எதிர் நின்றே!

தென்மொழி இதழ் தன் குறிக்கோளில் ஒருபோதும் பின்வாங்கியதும் இல்லை, சமரசம் செய்து கொண்டதுமில்லை. தென்மொழி ஓர் இதழன்று, ஓர் இயக்கம் என்று பாவலரேறு குறிப்பிட்டதற் கேற்ப இதழின் கட்டுரைகளில் பாடல்களில் தமிழுணர்வு கொழுந்துவிட்டெரியும்.

பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் வெண்ணூற்பா:
பாவலரேறு, பாடல்கள் மற்றும் கட்டுரைத் தொகுதிகளாக இருபத்தைந்துக்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்துள்ளார். அச்சு வடிவம் பெறாத படைப்புகளும் பல உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. பாவலரேறுவின் பாடற்படைப்புகளில் தனிப்பெருஞ் சிறப்புடன் குறிப்பிடத்தக்க ஒன்றுதான் உலகியல் நூறு. உலகின் இயற்கைத் தன்மைகளை விளக்கும் நூறு பாடல்களைக் கொண்ட நூல் என்ற பொருளில் உலகியல் நூறு என்று பெயரிட்டுள்ளார். இந்நூல் 1973 - 74ஆம் ஆண்டுகளுக்கிடையில் எழுதப்பெற்றது என்று நூலாசிரியரே தம் முன்னுரையில் குறிப்பிடுவார். தனிநூலாக இதனைப் படைத்த பின்னர், 1976 முதல் 78 முடிய தென்மொழி இதழில் பகுதி பகுதியாக இந்நூலின் பாடல்கள் வெளியிடப்பட்டன. பின்னர் 1982இல் உலகியல் நூறு முழு நூலாக வெளியிடப் பெற்றது. இந்நூலுள் உள்ள பாடல்கள் நூறும் வெண்பா யாப்பில் அமைந்தனவாகும். இந்நூலின் பாடல்கள் கருத்துச் செறிவால் நூற்பா எனும் உணர்வினை ஊன்றிப் படிப்பார்க்கு ஊட்டுவதால் இந்நூலின் பாவமைப்பை வெண்ணூற்பா(வெண்-நூல்-பா) எனும் புதிய சொல்லால் வழங்கலாம் என்பார் ஆராய்ச்சி முன்னுரை எழுதிய அருளி. பாடல்களோடு அதன் சுருக்கமான பொழிப்புரையும் இணைத்து வெளியிடப்பட்டுள்ளது. பாடல்கள் திண்ணிய மெய்ப்பொருள் கருத்துக்களை வெளிப்படுத்துவன வாகையால், பாடல் அமைப்பும் இறுகலாகவே உள்ளது. அதனைப் பொழிப்பு ஓரளவே குழைவாக எடுத்துக் கூறுகிறது. இதில் உள்ள கருத்துக்களை இதைவிட மிக எளிமையாக எடுத்துக் கூறுவதானால், அஃது இந்நூலைப்போல் பலமடங்கு பெரிதாக அமைந்துவிடும். பிற்காலத்து மெய்ப்பொருளுணர்வும் தமிழ்த் தகுதியும் அறிவு ஒளியும் வாய்க்கப் பெற்றோர் எவரேனும் அதைச் செய்யட்டும்என்று இந்நூலின் பொழிப்புரை குறித்து நூலாசிரியர் கருத்துரைப்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.

நூல் நுவலும் பொருள்:
நூலுள் பேசப்படும் உள்ளடக்கம் பற்றிப் பாவலரேறு பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.உலகியல் நூறு என்னும் இந்நூல் உயர்ந்த மறைவான உலகியல் செய்திகளை, ஓரளவு முற்றும் அடக்கிக் கூறுவதாகும். அகண்டாகாரமாகப் புடைவிரிந்து, எண்ணத்திற் கெட்டாமல் பரந்து கிடக்கும் இப்புடவியுள்(பிரபஞ்சத்துள்) மாந்தப் பிறப்பிடத்தின் துகள் இருப்பும், அவனின் துணுக்கிருப்பும், அத்துணுக்கின் ஆட்டமும் அடக்கமும், ஓக்கமும் ஒடுக்கமும் எத்தகையன என்பதைத் துல்லியமாக, மெய்ப்பொருள் நூல்கள் போல் விளக்கிக் காட்டுவது இந்நூல். இந்நூலுள் வரும் உண்மைகள் எல்லாம், எல்லார்க்கும், எவ்வகையானும் எளிதே விளங்குவன அல்ல. ஆழ்ந்து தோய்ந்த சிந்தனையால் வெளிப்படுத்தப் பெற்ற மெய்க்கூறுகள் இவை. உலகியல் நூறு அடிப்படையில் ஓர் அறவியல் நூல். தமிழின் பிற அறவியல் நூல்களைப்போல் இந்நூல் அமைக்கப்படவில்லை. அறிவியல், மெய்ப்பொருளியல், அறவியல், உலகியல் கருத்துக்களைப் பிசைந்து வார்த்த தனிப்படைப்பாக இந்நூல் அமைந்துள்ளது. அறிவியல், குறிப்பாக இயற்பியல் உண்மைகளையும் மெய்ப்பொருளியல் கருத்துக்களையும் இணைத்து உலகியல் மற்றும் வாழ்வியல் கருத்துக்களை முன்னிறுத்தி படைக்கப்பட்டுள்ள இந்நூல்போல் ஓர் அறவிலக்கிய நூல் தமிழில் முன்னும் இல்லை பின்னும் இல்லை. தமிழில் இது ஒரு புதிய இலக்கியவகை. உலகின் வேறெந்த மொழியிலாவது இதுபோல் ஓர் அறநூல் எழுதப்பட்டிருக்குமா? என்றால் ஐயமே.
தமிழ் வளர்ச்சிக்கும் தமிழின மீட்புக்கும் தமிழ்நில மீட்புக்கும் தொடர்ந்து தொண்டாற்றிய பாவலரேறு உலகியலை விளக்கப் புகுந்த இந்நூலின் நூறு பாடல்களிலும் எவ்விடத்தும் தமிழ், தமிழினம், தமிழ்நாடு இவைகளைக் குறிப்பிடாமல் பொதுமை தோன்றப் படைத்துள்ளமை இந்நூலின் தனிச்சிறப்பாகும். நாடு, இனம், மொழி கடந்த நிலையில் உலக மாந்தர் அனைவருக்கும் பொதுவானதாகவே இவ்வறவிலக்கியத்தைப் படைத்துள்ளார் பாவலரேறு.

நூல் அமைப்பு:
உலகியல் நூறின் அனைத்துச் செய்யுள்களிலும் உலகின் நுண்பொருள் பருப்பொருள் இயக்கங்கள் அனைத்தும் விளக்கியுரைக்கப் பட்டுள்ளன. இதன் பெரும் பகுப்பு இயல்களாகவும் குறும் பிரிவு நிலைகளாகவும் பாகுபாடு செய்யப்பெற்றுள்ளன. நிலை என்பது இருப்பு நிலை, இயல் என்பது இயங்கு நிலை எனவே உலக இருப்பும் இயக்கமும் இதில் காட்டப்பட்டுள்ளன என்பார் நூலாசிரியர் பாவலரேறு. உலகியலின் பெரும் பரப்பினை 1.உலகியல், 2.நாட்டியல், 3.மாந்தவியல், 4.பொதுமையியல், 5.வாழ்வியல், 6.குடும்பவியல், 7.ஆண்மையியல், 8.பெண்மையியல், 9.உறவியல், 10.அயலியல், 11.வினையியல், 12.செல்வயியல், 13.ஒப்புரவியல், 14.அறிவியல், 15.புகழியல், 16.இறப்பியல், 17.பிறப்பியல், 18.உயிரியல், 19.ஓர்பியல், 20.இறைமையியல் என்ற இருபது இயல்களாகப் பாகுபடுத்தி, ஒவ்வோர் இயலையும் ஐயைந்து நிலைகளாகக் கூறுபடுத்தி மொத்தம் நூறு தலைப்புகளில் நூறு வெண்பாக்களில் நூலை அமைத்துள்ளார்.

நூலின் தொடக்கம்:
தமிழ் நூல் மரபில் உலகம் என்று நூலைத் தொடங்குதல் மரபென்றும் மங்கலமென்றும் கருதப்படும். உலகியல் நூறு நூலின் தொடக்கத்தில் உலகம் என்று முதல் இயலின் தலைப்பிட்டு நூலைத் தொடங்கும் ஆசிரியர்,

புடவிபல ஒன்றுகடல் புன்மணலிஞ் ஞாலம்
அடவியென் மீன்செறிவாம் அண்டம்பல் கோடி
இடவரைகள் எண்டிசைகள் இவ்வுலக வாக்கம்
கடவிடைகள் நேர்ச்சிக் கணிப்பு (பா.1)

என்று முதல்பாடலை அமைத்துள்ளார். இப்பாடல் புடவி என்று தொடக்கம் கொண்டுள்ளது. புடவி என்பது பிரபஞ்சம், புடவிகளை நோக்க இவ்வுலகம் கடற்கரை மணற்பரப்பில் ஒரு மணல் துகளுக்கு ஒப்பாம். உலகு என்று தொடங்குவதிலும் பேரண்டப் பெரும் பரப்பாம் புடவி எனத் தொடங்குவதின் சிறப்பினை ஓர்ந்து உணர்தல் வேண்டும். புடவிகள் பலவாகும். அவற்றுள் ஒன்றினது, கடற்கரையின் புல்லிய மணலைப் போன்றது இவ்வுலகம். அடர்ந்த காடு போலும் செறிந்த விண்மீன்களைக் கொண்ட அண்டங்கள் பல கோடியாகும். இவற்றுள் இடமும் அளவுகளும் எட்டுத்திசைகளும் இவ்வுலகத்திற்கென உருவாக்கிக் கொண்ட ஆக்கங்களாம். வினாக்களும் விடைகளும் இங்குள்ள நிகழ்ச்சிகளின் அடிப்படையில் எழுந்த கணிப்புக் கூறுகளாம். நூலின் முழுச்சிறப்பும் முதற்பாடலிலேயே தெற்றெனப் புலப்படுகின்றது. காலம் என்று தனிப்பட்டு ஒன்றும் கிடையாது. தூரத்தையும் இடைவெளிகளையும் காலத்திலிருந்து தனியாகப் பிரிக்க முடியாது. ஒளியின் வேகத்தில் நம்மால் செல்லமுடியும் எனில் காலம் அங்கே மறைந்துவிடுகிறது. ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் வெளிப்படுத்திய ரிலேடிவிட்டி - சார்பியல் கோட்பாடு இப்பாடலில் பொதிந்துள்ளது. காலம் முதலான அளவுகள், மேல் கீழ், இடம் வலம், முன் பின் என்பன போன்ற இடம் திசைகள் குறித்த விளக்கங்களும் நாம் வகுத்துக் கொண்டவையே அன்றி வேறில்லை. நிகழ்ச்சிகளும் அது குறித்த கணிப்புக் கூறுகளுமே வினா விடைகளுக்கு அடிப்படை. இப்படி, தொடக்கச் செய்யுளிலேயே நம்மை மலைக்கச் செய்துள்ளார் நூலாசிரியர். பிரபஞ்சத் தோற்றம் பெருக்கம் ஒப்பு இவைகளை முதல்பகுதியில் குறிப்பிடும் ஆசிரியர் இப்புவியின் இறுதி பற்றியும் சுட்டிக்காட்டுகின்றார்.

தாயொளியும் ஒல்கத் தணந்து நிலைமாறிப்
போயழியும் கங்குற் பொடிந்து. (பா.5)

இதன் பொழிப்பு, இத்தொன்மையான உலகம் என்றோ ஒரு காலத்தில் தனக்கு ஒளி நல்கும் தாயாகிய கதிரவனின் ஒளி குறைந்து குளிரடைதலால் தன் நிலையில் திரிபுற்று, அதனின்று விலகியோடி இருட்பகுதிக்குள் புகுந்து பொடிந்து அழிவதாகும். சூரியன் வெப்ப ஆற்றல் முழுவதையும் இழந்த நிலையில் கரும்பொந்தாய் மாறும் அதனுள் பூமி தன்னையழித்துக் கொள்ளும் என்ற அறிவியல் உண்மை இப்பாடலில் பொதிந்துள்ளது. தமிழரின் தனிப்பெருஞ் சொத்தாகவும் உலகப் பொதுமறை என்ற சிறப்பிற்குரியதாகவும் விளங்கும் திருக்குறளின் பிழிவாக இவ்வுலகியல் நூறு நூலைப் பெருஞ்சித்திரனார் வடித்துள்ளார்.
பல குறட்பாக்களில் சொல்லப்பட்ட அறங்கள் இந்நூலின் ஒரே வெண்பாவில் அமைந்து சிறக்கின்றமை ஆழ்ந்து பயிலுதற்குரியது. குடும்பவியல், உறவியல், வினையியல், செல்வயியல், அறவியல் முதலான இயல்கள் திருக்குறளோடு ஒப்பிட்டு ஆய்தற்கு இடம்தருவனவாய் அமைந்துள்ளன.

பொதுவுடைமை அறம் கூறும் நூல்:
பாவலரேறுவின் உயிர்க்கொள்கைகள் மூன்றனுள் ஒன்றாகிய மார்க்சிய பொதுவடைமைக் கொள்கையை உலகியல் நூறின் பொதுமையியல், ஒப்புரவியல் பகுதிகளில் சிறப்பாக வலியுறுத்திப் பாடுகின்றார்.
ஊனுடம்பு வாய்த்த உயிர்க்கெல்லாம் வாழ்க்கை பொது (பா.62)
மனிதர்களுக்கு மட்டுமல்ல உலகில் வாழும் எல்லா உயிரினங்களுக்கும் உலகும் உலகவாழ்க்கையும் பொது, எனவே உலக வளங்களை அனைத்துயிர்களும் வேறுபாடின்றித் துய்த்தலே கடமை என்கிறார். வேறு பாடல்களிலும், உலகுடைமை யார்க்கும் உடைமை (பா.65) என்றும்
தொகையுலகில் இன்புறுதல் எல்லவர்க்கும் (பா.64) என்றும்
வரையறை செய்கின்றார். எல்லோரும் இன்புற்றிருக்க, இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு ஈதல் வேண்டும் என்ற பழைய ஈகைக் கொள்கையைப் பாவலரேறு முன்மொழியவில்லை. மாறாக, ஈகையின் வடிவமான வள்ளண்மை என்பது உயர்வில்லை என்றும் இல்லாமையைப் பேணிப் பாதுகாக்கும் பழைய முயற்சியே அது என்றும் கூறுகின்றார்.

வள்ளண்மை
என்றும் உயர்வன்றே இல்லாமை பேணுமொரு
தொன்று முயல்வே அது! (பா.63)

என்பது அப்பாடல்.

உழைப்பொருபால் ஓங்கும் உவப்பொருபால் ஒன்னார்
இழைப்பொருபால் எய்தல் இகழாம் - தழைப்பெய்தல்
வேண்டின் உடலுழைப்பு வேளாண்மை துய்ப்பு
யாண்டும் பொதுவமைத்தல் யாப்பு (பா.16)

உடலுழைப்பு ஒருபக்கமும் உவப்பு ஒருபக்கமும் என்றிருத்தல் இழுக்கு. நாடும் மக்களும் செழிப்படைய வேண்டுமானால் உடல் உழைப்பைப் பொதுவாக்கல் வேண்டும், உழவையும் உழவுக்கான நிலத்தையும் பொதுவாக்கல் வேண்டும், உலக இன்பங்களை நுகரும் துய்ப்பையும் பொதுவாக்கல் வேண்டும் என்று ஒரே பாடலில் பொதுவுடைமைக் கொள்கையின் பிழிவைக் கூறி உலகியல் நூறு அறவிலக்கியத்தை உலக அறவிலக்கியமாக இலங்கச் செய்துள்ளார் பாவலரேறு. உடைமை பொதுவாகவில்லை யென்றால் நாட்டில் சமத்துவம் இருக்காது. ஒருபக்கம் வளமை, மறுபக்கம் வறுமை என உலகமே அலங்கோலமாயிருக்கும். இந்த வேறுபாடுகளைக் களைந்து சமத்துவ சமுதாயத்தைக் கட்டமைத்தல் நமது கடமை. இந்தக் கடமையில் நாம் தவறினால்,

திருக்குவைசூழ் மாடத் தெருக்கடையின் ஓரத்து
உருக்குலையும் வாழ்க்கை ஒழிக -பெருக்கமுறும்
வான்தோய் வளமனைக்குள் வன்குடில்வாழ் ஏழையர்தம்
கான்தோயும் காலம் வரும். (பா.18)

வன்குடில் வாழ் ஏழையர் வளமனைக்கும் நுழையும் காலம் வரும் என்பதற்கு, ஒடுக்கப்பட்டவர்களின் எழுச்சி, போராட்டம், புரட்சி வெடிக்கும் என்பதாகப் பொருள் கொள்ளுதல் வேண்டும். பொதுமையியல், ஒப்புரவியல் என்ற இரண்டு இயல்களிலும் நூலாசிரியர் அமைக்கும் பத்து பாடல்களும் சுரண்டல் சமூகத்தின் இழிவையும் பொதுவுடைமைச் சமூகத்தின் மேன்மைகளையும் எடுத்துச்சொல்லி உலகின் இன்றைய தேவையை வலியுறுத்துகின்றன. மாந்தவியல் எனும் பகுதியில் ஒழுக்கம் என்பதை விளக்கப் புகுந்த நூலாசிரியர் ஒழுக்கம் பசியின்மை ஊன்றுதொழில் கல்வி (பா.14) என்கிறார். நாட்டு மக்களுக்கு உணவு, தொழில், கல்வி என்ற இம்மூன்றையும் முறையாக வழங்கினால் ஒழுக்கம் தானாக நிலைபெறும் என்கிறார். சமமற்ற பகிர்வே நாட்டில் நிலவும் குற்றங்களுக்கு அடிப்படை. சமத்துவம் ஒழுக்கத்தை நிலைநிறுத்தும் என்பது ஆசிரியர் கருத்து.அறங்களும் சட்டங்களும் அனைவர்க்கும் பொதுவா? நாட்டியல் என்னும் பகுதியில் அதிகாரத்திற்கும் சட்டத்திற்கும் உள்ள தொடர்பு குறித்த தம் பார்வையைப் பதிவு செய்கிறார் பாவலரேறு.

அமைத்த அதிகாரத் தாள்வோர்க்குச் சார்பாய்
சமைத்துக் கொளும்நெறியே சட்டம் -இமைத்துரைப்பின்
ஆனைக் குழுசெய் அறநெறியாங் கோர்ஏழைப்
பூனைக் குதவுமெனல் பொய். (பா.7)

சட்டங்கள் என்றைக்குமே அதிகாரத்தைக் கட்டமைக்கவும் விளிம்பு நிலை மக்களை ஒடுக்கவுமே உருவாக்கப்படுகின்றன என்ற உண்மையை விளக்குவதோடு ஆனைக் குழு அதாவது அதிகாரம் படைத்தவர்கள் உருவாக்கும் சட்டம் பூனைக் குழுவிற்கு அதாவது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு என்றைக்குமே உதவாது என்கிறார் ஆசிரியர். மேலும் இப்பாடலில் சட்டங்;கள் குறித்து அவர்முன் வைத்த விமர்சனங்கள் அறநெறிகளுக்கும் பொருந்தும் என்கிறார். அறநெறிகளை விளக்கப் புகுந்த ஓர் அறவியல் இலக்கியத்தில் அறம் - அதிகாரம் இவைகளுக்கு இடையிலான தொடர்பினைச் சரியான பார்வையில் எடுத்துக் காட்டுவதன் மூலம் நூலை வாசிப்பவர்களுக்கு உரிய வழிகாட்டியாகவும் திகழ்கிறார் பாவலரேறு. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற வெற்று முழக்கத்தைக் கேட்டுப் பழகிய நமக்குப் பாவரேறுவின் குரல் ஒரு புரட்சிக் குரலாகவே ஒலிக்கிறது.

தொண்டின் மேன்மை:
புகழியல் எனும் பகுதியில் தொண்டுநிலை பற்றி விளக்குமிடத்து, தோய்ந்தார் பொருட்டு உழைத்தல் தொண்டென்ப என்று தொண்டிற்கு இலக்கணம் வகுப்பதோடு தொண்டு செய்வதில் உள்ள இடர்ப்பாடுகளையும் பட்டியலிடுகிறார். பாடல் பின்வருமாறு,

தோய்ந்தார் பொருட்டுழைத்தல் தொண்டென்ப உள்ளச்சீர்
வாய்ந்தார் துணிவின் வயப்படுக -ஆய்ந்துரைக்கின்
துன்பம் இழவிழிவு தோளின்மை தூங்காமை
இன்பென்பார் ஆற்றல் இனிது. (பா.75)

இப்பாடலில் துன்பம், இழப்பு, இழிவு, துணையில்லாமை, சோர்தலில்லாமை இவைகளை யார் இனிது என்று கருதி உழைக்க அணியமாய் இருக்கின்றார்களோ அவர்களே தொண்டு செய்தல் முடியும் என்கிறார். பாவலரேறு அவர்களின் வாழ்க்கையை அப்படியே படம் பிடிப்பதாக உள்ளது இப்பாடல். தமிழுக்குத் தொண்டு செய்து வாழ்க்கையையே அதற்காக ஈடு கொடுத்த ஆசிரியர் மேற்கூறிய இலக்கணங்களுக்கு இலக்கியமாகத் திகழ்ந்தார் என்பது மிகையன்று.
அதே புகழியல் பகுதியில் மான நிலை என்ற பொருளில் பாடும் போது,

மனவுயர்ச்சி தாழவரல் மானம் அதுதான்
இனவுயர்ச்சி காட்டும் எழுச்சி -இனவுயர்ச்சி
உள்ளுவார்க் கில்லை உயர்மானம் ஆங்கதனைக்
கொள்ளுவார்க் கில்லை குனிவு (பா.74)

என்று பாடுகிறார். மனவுயர்ச்சிக்குத் தாழ்வு வருமானால் அச்சூழலில் தோன்றும் நல்லுணர்வே மானம் என்றும் இந்த நல்லுணர்வுதான் ஓர் இனத்தின் உயர்வைக் காட்டும் அடையாளம் என்றும் குறிப்பிடும் ஆசிரியர், இனவுயர்ச்சியைக் கருதி உழைக்கின்றவனுக்குத் தன்பொருட்டு இந்த மானவுணர்ச்சி தேவையில்லை என்றும் அதனால் தாழ்ச்சியொன்றும் இல்லை என்றும் கூறுகின்றார். இனத்தின் உயர்வுக்குப் பாடுபடும் தொண்டன், போராளி தனிப்பட்ட மானவுணர்ச்சி பற்றியெல்லாம் கவலைப்படத் தேவையில்லை. தமிழ் இனவுயர்ச்சிக்காகப் பாடுபட்ட பெருஞ்சித்திரனாரும் தம் தனிப்பட்ட மானவுணர்ச்சி பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல் எத்தனையோ அவமானங்களையும் தாழ்வுகளையும் ஏற்றுப் போராடினார் என்பது இங்கே நினைத்துப் பார்க்கத்தக்கது.

பிறப்பியலும் உடற்கூற்று வண்ணமும்:
பிறப்பியல் என்னும் இயலில் உடல் நுகர்ச்சி நிலை, கருநிலை, உருநிலை முதலான பாடல்களில் மனித உயிர் பிறப்பின் நுணுக்கங்களை வியப்புற விவரித்துச் சொல்கின்றார்.

விழிமின்பாய்ந் துள்வெதுப்ப வேண்மதநீர் ஓடிக்
கழிபெருநற் காமம் கனப்பப் -பொழியன்பால்
சொல்லிதழ்க்கை மொய்த்தூர்ந்துள் ஒத்துச் சுரப்பாடி
வல்லுறுத்துத் துய்த்தல் வரைத்து (பா.81)

ஆண் பெண் உடல்நுகர்ச்சியை வருணிக்கும் இப்பாடல் படித்து இன்புறுதற்குரியது. அடுத்த பாடலில்

வித்துசினை ஒன்றித்தாய் வேதுநீர் உள்வாங்கிப்
பத்துமதி தாங்கிப் படர்ந்து (பா.82)

என்று கருநிலையை விவரிக்கும் பகுதி, ஒருமட மாது.. .. எனத்தொடங்கும் பட்டினத்தாரின் உடற்கூற்று வண்ணத்தை ஒத்த நயமான பகுதியாகும்.

உலகியல் நூறும் இயற்பியலும்:
பாவலரேறு தாம் படைத்த உலகியல் நூறு எனும் அறிவற இலக்கியத்தில் பிற அறநூல்கள் பேசாத பல புதிய உண்மைகளை பேசுகின்றார். நூலின் தொடக்கத்திலும் இடையிலும் நிறைவிலும் அவர்விளக்கும் அறிவியல் மற்றும் மெய்ப்பொருளியல் உண்மைகள் நூலாசிரியரே குறிப்பிடுவது போல் எல்லோர்க்கும் எளிதில் விளங்கக் கூடியதாக இல்லை. ஆழ்ந்திருக்கும் கவியுள்ளம் காணும் அறிவினோர்க்கே விளக்கமுறுதல் கூடும். குறிப்பாக இறப்பியல், உயிரியல், ஓர்பியல், இறைமையியல் முதலான இயல்களில் ஆசிரியர் விளக்கும் அறங்கள் அத்தகையனவே. ஓர்பியலில் இடம்பெறும் இயக்கநிலை பற்றிய பாடலில் ஆசிரியர் பொருள், ஆற்றல் இரண்டின் இயல்புகளையும் விளக்கி, பொருளின் உள்நின்று இயக்குகின்ற உயிர்க்கூறே இறை என்று விளக்குகின்றார்.

பொருளனைத்தும் ஒன்றாகும் ஆற்றலெலாம் ஒன்றாம்
உருளிரண்டும் ஒன்றினோ டொன்றாம் - மருள்நிலைகள்
ஆன்ற வியக்கென்ப ஆதல் பொருளாம்உள்
ஊன்றல் இறையென் றுணர் (பா.93)

உலகில் பொருள்கள் வேறு வேறாகப் பிரிந்து நின்றாலும் அடிப்படையில் பொருட்கூறுகள் அனைத்தும் ஒன்றே. பொருளை மிகச்சிறிய கூறாகப் பகுத்தால் கிடைப்பது அணு. எல்லா அணுவினுள்ளும் மூலக்கூறுகளாய் இருப்பவை எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் எனும் இவையே. எனவே பொருளனைத்தும் ஒன்றாகும் என்று ஆசிரியர் உரைப்பது சாலப் பொருத்தமே. பொருள்கள் ஒன்றானால் ஆற்றலும் ஒன்றே, ஏனெனில் பொருளைச் சிதைக்கின் ஆற்றலாகும், ஆற்றல் திரண்டால் பொருளாகும். பொருள், ஆற்றல் இவைகளை விளங்கிக் கொண்டால் இறையை உணர்தல் எளிது என்பதனால் இரண்டையும் விளக்கிவிட்டு ஆற்றலாகவும் பொருளாகவும் இருக்கும் அதனை உள்நின்று இயக்கும் உயிர்க்கூறே இறை என எளிமையாய் விளக்கம் தருகின்றார். நவீன இயற்பியலில் அணுக்களை அதைவிட நுட்பமான ஆல்பா துகள்களால் துளைத்துப் பார்த்தபோது அணுவின் உள்ளே பெரும்பாலும் வெட்டவெளியாக இருப்பதையும் மையத்தில் கருபோல் சில புரோட்டான் துகள்களும் அவற்றைச் சுற்றிச் சில எலக்ட்ரான் துகள்களும் இருப்பதைப் பார்த்தார்கள். ஓர் அணுவுக்கும் மற்றோர் அணுவுக்கும் உள்ள வேறுபாடு அதன் கருவில் இருக்கும் துகள்களின் எண்ணிக்கையில்தான். உள்ளே இருக்கும் துகள்கள் எப்பொழுதும் இயங்கிக் கொண்டே இருக்கின்றன. இந்த இயக்கத்தின் வடிவம்தான் நாம் காணும் பொருள்கள். ஊன்றிப் பார்த்தால் இந்தப் பிரபஞ்சம் முழுவதுமே இயக்கம்தான். இதுதான் அறிவியலின் முடிபு. இந்த இயக்கம்தான் இறை என்பது பாவலரேறுவின் விளக்கம்.

.. .. .. .. .. .. .. .. .. வற்றாத
ஊற்றாய் உலகமாய் ஒண்கதிராய் நீள்விசும்பாய்
ஆற்றல் நிகழ்த்தும் அலைவு (பா.78)

ஆற்றலின் அலைவுத் தோற்றங்களே உலகமாகவும் விண்மீன்களாகவும் நீண்ட ஆகாயமாகவும் தோற்றம் கொள்கின்றன என்ற இப்பாடல் கருத்து இயற்பியலின் அடிப்படையில் அமைந்துள்ளமை ஆழ்ந்து விளங்கிக் கொள்ளுதற்குரியது. இன்றைக்குப் பல்கிப் பெருகியிருக்கும் சமயங்களும் அவற்றின் இறைத் தத்துவங்களும் குறித்துப் பாவலரேறு தம் விமர்சனத்தைத் தெளிவாக உரைக்கின்றார். எந்த மதங்களும் உண்மையை முழுதாகக் காணவில்லை. எல்லா மதக்கோட்பாடுகளும் கற்பிதங்களே என்பதைப் பின்வரும் பகுதியால் விளக்குகின்றார்.

ஓவத் துணுக்கால் உருவறியார் ஒவ்வொன்றா
மேவத் துடிக்கும் மிகை உருவம் (பா.100)

பெரியதோர் ஓவியத்தைப் பலகூறுகளாக்கிய நிலையில், அவற்றின் ஒவ்வொரு கூறையும் முழுஉருவமாகக் கற்பனை செய்துகொள்ளும் கற்பிதங்களே மதங்களும் கடவுளர்களும் என்று மதங்களின் போலிமையைக் கடிந்துரைக்கின்றார். அதே பாடலில் நீர்க்குண்டோ உண்மை நிறம் என்று முடிப்பதன் வாயிலாக இறைமை தன்னை வெளிப்படுத்தி நிற்கும் உயிர்க் கூற்றானும் பொருட்கூற்றானும் வடிவமெய்துமே அன்றி தனக்கென்று ஓர் வடிவமில்லை என்னும் மெய்ப்பொருளியல் உண்மையை முற்ற முடிபாக முடித்து வைக்கின்றார்.

முடிப்புரை:
பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் உலகியல் நூறு எனும் இவ்வறநூல் தமிழிலக்கிய உலகிற்கு ஒரு புதிய புதுமையான வரவு. தமிழின் நீண்ட இலக்கியப் பரப்பில் மிகப்பலவான அறநூல்கள் எழுதப் பட்டிருந்தாலும் அவற்றிலிருந்து உலகியல் நூறு பெரிதும் மாறுபடுகின்றது. பெரிதும் திருக்குறள் கருத்துக்களை உள்வாங்கி நூல் உருவாகியிருந்தாலும் இருபதாம் நூற்றாண்டின் அறிவியல் வளர்ச்சி, உலக மெய்ப்பொருளியல் அறிமுகம் முதலான புதிய பரிமாணங்களால் நூல் புதிய தளத்தில் அறம் பேசுகிறது. பாவலரேறுவின் பிரபஞ்ச ஞானம், உலகு தழுவிய பார்வை, பொதுமை வேட்கை, இறையியல் பற்றிய அறிவியல் பார்வை முதலான புதிய பாடுபொருட்கள் இந்நூலின் தனிச்சிறப்பு.

எப்படி யேனும் இத்தமி ழகத்தை
முப்படி உயர்த்திடல் வேண்டும் -என்
மூச்சதற் குதவிடல் வேண்டும்
தமிழ்ப்படி யேறின் தமிழினம் ஏறும்
தாழ்நிலை இழிவுகள் மாறும்!- நம்
தலைவிலை எனில்தரல் வேண்டும்

என்று தமிழ்மொழிக்காக, தமிழினத்துக்காக, தமிழ் நிலத்துக்காகத் தம் மூச்சையும் தலையையும் தரத் தயாராயிருந்த பாவலரேறுவின் பணி அளப்பரியது, ஒப்புயர்வற்றது, வணக்கத்திற்குரியது. பாவலரேறுவின் படைப்புகளைத் தமிழ் என்ற ஒற்றை நேர்க்கோட்டுப் பார்வையில் மட்டுமே பார்ப்பது படிப்பது பரப்புவது என்பதாக நம் பணி நின்றுவிடுதல் கூடாது. அவரின் பன்முகப் பார்வையும் பல்நோக்கும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக, பாவலரேறுவின் படைப்புகளின் சமுதாயப் பார்வை, அரசியல் பார்வை, தத்துவப் பார்வை, நடப்பியல் பார்வை, அறிவியல் மற்றும் உளவியல் பார்வை போன்ற தலைப்புகளில் அவரின் படைப்புகள் அலசப்பட வேண்டும். இம்முயற்சிகளே பாவலரேறுவின் பன்முகப் பரிமாணங்களை உலகுக்குக் காட்டும்.

1 comments:

said...

மதிப்பிற்குரிய முனைவர் நா.இளங்கோ அவர்களுக்கு,
வணக்கம். தங்கள் ‘பெருஞ்சித்திரனாரின் உலகியல் நூறு ஓர் ஆய்வு’ கட்டுரை வாசித்தேன். தமிழ் ஆர்வலர்க்கும், தமிழ் கற்றோர்க்கும் மிகப் பயனுள்ள கருத்துகளாகும். ’உலகியல் நூறு’ புத்தகம் கிடைக்குமா என்று புத்தகக் கடைகளில் முயற்சிக்கிறேன்.

நான் அரசுப்பணியில் கண் மருத்துவப் பேராசிரியராய்ப் பணியாற்றி பணிநிறைவு பெற்றபின் தமிழில் புதுக்கவிதை மற்றும் மரபுப் பாக்கள் இயற்றி ‘எழுத்து’ வலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறேன்.

மதுரைக்கு அருகிலுள்ள சோழவந்தான் எனது ஊர். இவ்வூரில் பிறந்து 47 ஆண்டுகள் வாழ்ந்து மறைந்த பெரும்புலவர் அரசஞ் சண்முகனாரின் படைப்புகளின்மேல் மிகுந்த ஆர்வம் கொண்டவன். அரசஞ் சண்முகனாரின் படைப்புகளிலிருந்து சில பாடல்களையும் ‘எழுத்து’ வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறேன்.

என் முகவரி:

டாக்டர்.வ.க.கன்னியப்பன்,
மஞ்சமலை,
திண்டுக்கல் மெயின் ரோடு,
புது விளாங்குடி,
மதுரை 18
கைபேசி எண்: 98430 70840